சென்னை: தமிழகத்தில் மெத்தனால், கரைப்பான்களின் பயன்பாடுகளை மாவட்ட அளவிலான உயரதிகாரிகளை கொண்ட கூட்டு குழு கண்காணித்து வருவதாக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மெத்தனால் மற்றும் இதர கரைப்பான்கள் ஆகியவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை முறைப்படுத்தும் பொருட்டும், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினை அமைத்துள்ளது.
இந்த மாவட்ட அளவிலான குழுவில் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைவராகவும், துணை ஆணையர், உதவி ஆணையர் (ஆயத்தீர்வை), காவல் கூடுதல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), துணை ஆணையர் (உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை), மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
மாவட்ட அளவிளான இந்த கூட்டு தணிக்கை குழுவானது அனைத்து வகையான கரைப்பான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள், ரசாயனங்கள் பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகள் மற்றும் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு மெத்தனால் மற்றும் கரைப்பான்களின் பரிமாற்றம், சேமிப்பு, பயன்பாடு மற்றும் போக்குவரத்து தொடர்பான அனைத்து பரிவர்த்தனை பதிவுகளையும் ஆய்வு செய்து சரிபார்க்கிறது.
மேலும் இந்த குழுவானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு தகவல் கிடைக்கப்பெற்றாலும் எந்தவொரு வளாகத்தையும், குழுவினர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு தகவலின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்த்தபின் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மெத்தனால், கரைப்பான்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் குழு உறுப்பினர்களால் சோதனை செய்யப்படுகிறது. மாவட்ட அளவிலான குழுக்களின் கூட்டு செயல்பாடுகள் அனைத்தும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரால் கண்காணிக்கப்படுகிறது. இந்த மாவட்ட அளவிலான உயரதிகாரிகளை கொண்ட கூட்டு குழுவின் நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் மெத்தனால், கரைப்பான்களின் பயன்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.