ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதில் வழிகாட்டுநர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஊட்டியில் சிறப்பு குறை தீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், பிளஸ்- 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்க்கை பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, நமது மாவட்டத்தில் பள்ளி படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்விக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நமது மாவட்டத்தில் முதல்முறையாக, பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்க்கை பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, கல்வி வழிகாட்டுதல் மற்றும் இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்வி தொடர்பான அனைத்து உதவிகளும் கட்டாயமாக செய்து தரப்படும்.
ஆகவே, மாணவ, மாணவிகள் கட்டாயமாக உயர்கல்வியை கற்க வேண்டும். ஏனென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டத்தின் வாயிலாக மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், மாதம்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறார்கள்.
இதுபோன்ற திட்டங்களை மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும். நமது மாவட்டத்திலும் அரசு கலை கல்லூரிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி வசதிகளும் உள்ளன. இதனையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேவைபடும் பட்சத்தில் வங்கிகள் மூலம் கல்வி கடனுதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் – 2 முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி செல்வதை உறுதி செய்யும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெண்கள் எதிரான குற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் 181 என்ற எண்ணிலும், குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் 1098 என்ற எண்ணிலும் தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பாக உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களிடமும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக 0423 – 2966034 மற்றும் வாட்ஸ் அப் எண் 75983 80243 கொண்ட கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர், உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அரசு கலைக்கல்லூரி முதல்வர்/பேராசிரியர், அரசு தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர் / பேராசிரியர் உள்ளிட்ட நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்,கூட்டத்தில் சுமார் 52க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகள் பிரதானமாக இருந்தது. அவர்களுக்கு உடனடியாக உரிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) நந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த கல்கி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஞானராஜ், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.