சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு ஆலோசனை நடைபெற்று வருகிறது. கள ஆய்வில் முதல்வர் திட்டம் மூலமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட முக்கியமான அதிகாரிகள் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 2 நாள் திட்டமானது சென்னை மறைமலைநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
மறைமலை நகரில் இருக்கக்கூடிய மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல்நாள் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடனும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. போதை பொருள் முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுடன் முக்கிய அறிவுரைகளை வழங்கினார். இரண்டாம் நாள் கூட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தை பொறுத்தவரை 4 மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களும் , அமைச்சர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். மணல் துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்பட 28 துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பருவமழை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தால் மழை பாதிப்பு என்பது அதிகமாகவே காணப்படும். எனவே மழை பாதிப்பு இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளாகும். இந்நிலையில் இந்த ஆண்டு பொறுத்தவரை மழை பெய்தாலும் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருக்கக்கூடிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்தாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் என நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்பது குறித்து அது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது வரை திறக்கப்படாமல் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடனே திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டமானது 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.