ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை உணவு திட்ட துவக்க நிகழ்ச்சி நடந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலை உணவு உண்ண வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, 2ம் கட்டமாக நேற்று தமிழ்நாட்டில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தற்போது 290 பள்ளிகளில் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். இத்திட்டம் நேற்று பல்வேறு பகுதிகளிலும் துவக்கப்பட்டது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை கொண்டு திட்டம் துவக்கப்பட்டது. ஊட்டியில் ஓடைக்காடு பள்ளியில் நடந்த விழாவில், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்து குழந்தைகளுடன் உணவு அருந்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஷோபா உட்பட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் என கலந்து கொண்டனர். தொடர்ந்து கன்னேரி மந்தனை பள்ளியில் நடந்த விழாவில் பாலகொல ஊராட்சி துணை தலைவர் மஞ்சை மோகன் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, கன்னேரி வார்டு உறுப்பினர் சிவன்பெள்ளன், ஊராட்சி செயலர் கார்த்திக் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலும் நடந்த காலை உணவு வழங்கும் திட்டத்தினை உள்ளாட்சி அமைப்புக்களை சேர்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.