*கலெக்டர், முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தனர்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் 2ம் கட்டமாக 1013 பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் சாந்தி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, முதற்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இத்திட்டமானது நேற்று தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கியது. திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர், மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் கலந்துரையாடியபடி உணவருந்தினார்.
தர்மபுரி மாவட்டத்தில், டவுன் நகராட்சி தொடக்கப்பள்ளியில் கலெக்டர் சாந்தி, வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ ஆகியோர் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, தர்மபுரி நகர்மன்ற துணைத்தலைவர் நித்யா அன்பழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், ஆர்டிஓ கீதாராணி, நகராட்சி ஆணையர் புவனேஷ்வரன், மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி, பொறியாளர் புவனேஸ்வரி, கவுன்சிலர்கள் நாகராஜ், சத்யா முல்லைவேந்தன், சமயா ராஜா, ஜெகன், சந்திரா, சின்னபாப்பா, மாதேஸ்வரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்கள், பேருராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1013 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊராட்சிகளில் 951 பள்ளிகளில் படித்து வரும் 46,741 மாணவ, மாணவிகளும், பேரூராட்சிகளில் 49 பள்ளிகளில் படித்து வரும் 3812 மாணவ, மாணவிகளும், நகராட்சி பகுதியில் 13 பள்ளிகளில் படித்து வரும் 974 மாணவ, மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் 1013 பள்ளிகளில் 51,527 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தில், 2833 சுய உதவிகுழு உறுப்பினர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, காலை உணவுத் திட்டத்தில் சமையலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, மோளையானூர் அரசு துவக்கப்பள்ளியில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான பழனியப்பன், குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் ராசு.தமிழ்ச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரம் தர்மலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவர் துரைப்பாண்டியன், துணைத் தலைவர் மணி இளங்கோ, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உதயசூரியன், பொன்னுசாமி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சரவணன், கவுதமன், தமிழ், ரமேஷ், சதிஷ், முகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல்
திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா, செவ்வாய்க்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி, புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல், வெண் பொங்கல், வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, வெள்ளிக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மேலும், வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.