புதுடெல்லி: குற்ற வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் எம்பி அப்சல் அன்சாரி நேற்று எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் கடந்த 2005ல் எம்எல்ஏ கிருஷ்ணநாத் ராய் கொல்லப்பட்டது தொடர்பாகவும், வாரணாசியை சேர்ந்த தொழிலதிபர் நந்த் கிஷோர் 1997ல் கடத்திக் கொல்லப்பட்டது தொடர்பாகவும், காஜிபூர் மக்களவை தொகுதி எம்பி அப்சல் அன்சாரி மற்றும் அவரது சகோதரரும் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து எம்பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றம் கடந்த 29ம் தேதி தீர்ப்பளித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, 2 ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் எம்பிக்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதன்படி, அப்சல் அன்சாரியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.