செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உட்கோட்டத்தில் சிஐடி சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜசேகரன்(37). இவர் நேற்று முன்தினம் செங்கம்பூண்டி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றிருந்த குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக மதியம் 3 மணியளவில் காரில் சென்றார். வாழ்குடை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே முக்கூர் கிராமத்தை சேர்ந்த 6 பேர், ஒருவரை ஆபாசமாக பேசி தாக்கினர்.
உடனே எஸ்ஐ ராஜசேகரன், காரை நிறுத்திவிட்டு தகராறை தடுத்து அந்த நபரை மீட்டார். இதில் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அவரை ஆபாசமாக பேசி சட்டையை பிடித்து இழுத்து தாக்கினர். மேலும், 9 பேரை வரவழைத்து சரமாரி தாக்கியுள்ளனர். அவரது கார் மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது. அருகில் நின்ற ரவி என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப் பதிந்து 7 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.