சென்னை: எஸ்.ஆர்.எம்.மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக 142 பேரிடம் 88 கோடியே 66 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வாங்கி மருத்துவக் கல்லூரியில் இடம் தராமல் ஏமாற்றிவிட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் கடந்த 2016ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், ஐஜேகே கட்சியை சேர்ந்த பாபு, வேந்தர் மூவீஸ் சுதிர் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி மற்றும் மற்றவர்கள் சொத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் மதன் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் கடந்த 2016ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில், மோசடி செய்த தொகையை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, மாணவர்களிடம் பெற்ற தொகையை பாரிவேந்தர் திரும்ப அளித்ததையடுத்து அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாரிவேந்தருக்கு 2017 மற்றும் 2022ல் சம்மன் அனுப்பப்பட்டது. அவரது மகன் ரவி பச்சமுத்துவுக்கு 2023 ஜனவரி 19 மற்றும் ஜனவரி 30ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தனக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை கோரி பாரிவேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், 88.66 கோடி ரூபாயை திரும்ப அளித்து வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ளதால் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த பணத்தை ஜாமீன் பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.
வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் மீதான மூல வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த பணத்தை வேறு விதமாக சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, மனுதாரருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை அமைப்பு அதன் கடமையை செய்வதை தடுக்க முடியாது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோர முடியாது. அவர்களது விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி பாரிவேந்தரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.