நிலக்கோட்டை: கொடைரோடு அருகே விவசாய நிலத்தில் உழுத போது 17ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே பொம்மனம்பட்டியை சேர்ந்தவர் பாலுசாமி. விவசாயி. இவரது நிலத்தில் நேற்று மானாவாரி பயிர் செய்ய உழுதபோது நடுகல் ஒன்று தென்பட்டது. தகவலறிந்து வந்த வரலாற்று பேராசிரியர் லட்சுமணமூர்த்தி அடங்கிய குழுவினர் அந்த நடுகல்லை ஆய்வு செய்தனர். ‘‘இந்த நடுகல்லில் 2.5 அடி உயரம், 2 அகலத்தில் இரண்டு போர் வீரர்கள் சிற்பம் உள்ளது.
ஒருவர் துப்பாக்கியுடனும் மற்றொருவர் கூர்வாளுடனும் இருப்பதால், இது 17ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம். தலையில் கொண்டையுடனும், கையில் துப்பாக்கியும் இருப்பதால் முதலாம் நாயக்கர் கால சிற்பங்களாக இருக்கலாம். இந்த சிற்பம் போர் வீரர்களின் அடையாளமாக வைக்கப்பட்டு குலதெய்வமாக வழிபட்டு வந்திருக்கலாம்’’ என்றனர்.