சென்னை: மழை வெள்ளத்தின் போது, மாவட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களின் போது பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மாவட்ட பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மழைக்காலங்களில் முறிந்து விழும் மரங்களை வெட்டுவதற்கான ஆயுதங்கள், வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்கவும், கால்நடைகளை மீட்கவும் பயன்படுத்தும் ரப்பர் படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மாவட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைத்துள்ள உபகரணங்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மழைக்காலங்களில் எந்த நேரத்திலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.