புதுடெல்லி: பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புகள் குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்று பேசியதாவது: இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றத்தால் கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகள் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன. இது பேரிடரை தாங்கும் உட்கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பேரிடர் மேலாண்மைக்கான தேவையை வலுப்படுத்துகின்றன. 1999ம் ஆண்டு சூப்பர் சூறாவளி மற்றும் 2004ம் ஆண்டில் சுனாமி உள்ளிட்ட பேரழிவுகளை இந்தியா சந்தித்துள்ளது. பேரிடரை தாங்கும் உட்கட்டமைப்புகளை உருவாக்க 5 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்கால சவால்களை சமாளிக்க தகுதியான திறமையான பணியாளர்களை உருவாக்க, பேரிடர் தாங்கும் கற்றல்கள், திறன் மேம்பாட்டு திட்டங்களை உயர்கல்வியில் ஒருங்கிணைப்பது முக்கியம். பேரிடர்களை தாங்கும் திறன் கொண்ட நாடுகளிடம் இருந்து சிறந்த நடைமுறைகளையும், கற்றல்களையும் ஆவணப்படுத்த உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் தேவை. வளரும் நாடுகளுக்கு தேவையான நிதியை முன்னுரிமையாக அணுவகுவதை உறுதி செய்வதற்கான திட்டங்கள் வகுக்க வேண்டும். சிறிய தீவுகளில் உள்ள வளரும் நாடுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முன்கூட்டி முன்னெச்சரிக்கை விடுக்கும் அமைப்புகளை ஒருங்கிணைத்து கடைசி நிலை வரை பயனுள்ள தகவல்தொடர்பை எளிதாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.