சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னை மாநகர காவல் எல்லையில் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களின் போது பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மாவட்ட பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். மழைக்காலங்களில் விழும் மரங்களை உடனுக்குடன் வெட்டி அப்புறப்படுத்தவும், தேங்கியுள்ள இடங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற ராட்சத நீர் இறைப்பான் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில், சென்னை மாநகர காவல்துறையுடன் ஆயுதப்படையினர் மற்றும் மாவட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைத்துள்ள உபகரணங்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்தார். எந்த நேரத்திலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், ஆயுதப்படை துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.