நன்றி குங்குமம் தோழி
பெண்களின் மிகவும் கம்பர்டபுளான உடை லெக்கிங்ஸாக உள்ளது. அவை பல நிறங்களில் வருவதால், உடைக்கு ஏற்ப தேர்வு செய்வது எளிதாக உள்ளது. அணிவதும் வசதியாக உள்ளது. ஆனால் இந்த உடை நம் நாட்டில் இருக்கும் வெப்பநிலைக்கு ஏற்றதுதானா? இதனால் ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படுமா? உடல் சூடாகிறது: இறுக்கமான உடைகள் மற்றும் லெக்கிங்ஸ் அணிவது, சருமத்தில் வறட்சியை உண்டாக்கும். அழுக்கை வியர்வை மூலமாக வெளியேற அனுமதிப்பதில்லை. இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது.
பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள்: இறுக்கமான உடைகளை அணிவதால் சிவப்பு கொப்புளங்கள் உண்டாகிறது. கால்களில் உள்ள வேர்க்கால்கள் அதிகமாக பாதிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன.
படர்தாமரை: இறுக்கமான ஆடைகள் அணிவதால் உடல் சூடு வெளியேற முடியாமல் போகிறது. இதனால் அரிப்பு, உடல் சிவப்பாதல் ஆகியவை உண்டாகிறது. இது படர்தாமரை வர காரணமாக அமைகிறது.
அரிப்பு: படர்தாமரையை விட கொடுமையானது அரிப்புதான். இது பூஞ்சைகளினால் உண்டாகிறது. உடற்பயிற்சி மற்றும் ஓடும் போது லெக்கிங்ஸ் அணிவதால் அதிகமான வியர்வை உண்டாகிறது. இதனால் பல தொற்றுகள் ஏற்படும். லெக்கிங்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உடற்பயிற்சி முடிந்ததும், உடையை மாற்றிவிடுவது நல்லது. மேலும் குளிப்பது அவசியம். பூஞ்சைக்கு எதிராக செயல்படும் க்ரீம்களை பயன்படுத்தலாம்.
ஈஸ்ட் தொற்று: அதிகப்படியான பெண்கள் ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்ட் சூடாக இருக்கும் இடத்தில் நன்றாக வளர்ச்சியடைகிறது. நீங்கள் அணியும் லெக்கிங்ஸ் அது வளர நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருகிறது. நாள் முழுவதும் லெக்கிங்ஸ் உடன் இருப்பது தவறானது.
வறட்சி: லெக்கிங்ஸ் உங்களது உடலின் ஈரப்பதத்தை குறைத்து உடல் அரிப்பு ஏற்பட காரணமாவதுடன், சருமத்தை வறட்சியடைய செய்யும். இறந்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். லெக்கிங்ஸ் அணிபவர்கள் அதற்கான சரும பாதுகாப்பினையும் மேற்கொள்வது அவசியம்.
– அமுதா அசோக்ராஜா, திருச்சி.