நன்றி குங்குமம் தோழி
மாற்றுத்திறனாளிகளிடம் நிச்சயம் ஏதேனும் ஒரு திறமை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்பிலிட் ஸ்பைன் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்வேதா மந்த்ரி, இயலாமை எனும் வார்த்தைக்குள் முடங்கிவிடாமல், ஸ்டாண்ட்-அப் காமெடி மூலம் தன் திறமைகளை வெளிப்படுத்தி தனித்து மிளிர்கிறார். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் ஆயுதமாக நகைச்சுவையை கையிலெடுத்திருக்கும் ஸ்வேதா, மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதுடன் தன் விடாமுயற்சி மூலம் பிறரையும் உத்வேகத்துடன் செயல்பட தூண்டுகிறார்.
“2016ல் யூடியூப் தளத்தில் ஸ்டாண்ட்- அப் காமெடி வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த போது எனக்கு இந்த ஐடியா வந்தது. மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நகைச்சுவைத் திறனுடன் சமூகத்திற்கு வெளிப்படுத்தினால் என்ன என்று தோன்றியது. முதுகெலும்பு மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சியின்மை காரணமாக முதுகெலும்பில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தக்கூடிய ‘ஸ்பைனா பிஃபிடா’ (Spina bifida) எனும் குறைபாட்டுடன் பிறந்தேன். அதற்கான அறுவை சிகிச்சை செய்த பிறகு ஊன்றுகோல் பிடித்து நடக்கமுடியும் என்றனர் மருத்துவர்கள்.
எனக்கு நகைச்சுவை நடிகர்களை பிடிக்கும். அவர்களின் வீடியோக்கள் நிறைய பார்ப்பேன். இந்திய நகைச்சுவை நடிகர்கள் மட்டுமில்லாமல் ஹன்னா கேட்ஸ்பி, டெய்லர் டாம்லின்சன், அலி வோங் மற்றும் ஜெர்ரி சீன்ஃபீல்ட் போன்ற உலகளாவிய நகைச்சுவை நடிகர்களும் என்னை கவர்ந்தார்கள். என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கான விஷயங்களை பெற முடியும். என்னுடைய தனிப்பட்ட போராட்டங்களை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்த முயன்ற போது அதுவே என் நோக்கமாகவும் மாறியது.
மாற்றுத்திறனாளிகள் நகைச்சுவை செய்வதுடன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள் என்பதை நிரூபிக்கத் தொடங்கினேன். ஆரம்ப காலத்தில் ஏமாற்றங்களை சந்தித்தேன். 2016ல் எனது சொந்த ஊரான புனேவில் ஸ்டாண்ட்-அப் காமெடியனாக நான் மேடை ஏறியபோது பலரும் என்னை நிராகரித்ததை என்னால் பார்க்க முடிந்தது. ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஸ்டாண்ட்-அப் காமெடியனாக மேடையேறியிருப்பது அவர்களுக்கு பழக்கப்படாத காட்சியாக இருந்திருக்கலாம்.
ஆனால், என்னுடைய முதல் தருணம் என்னால் சக்சஸ் செய்ய முடியவில்லை என்று நினைக்கும் போது அது எனக்குள் பெரிய மனச்சோர்வினை ஏற்படுத்தியது. அதன் பின் எவ்வளவு சோர்வடைந்தாலும் பின் வாங்கக்கூடாது என்ற ஒரே எண்ணம்தான் என் மனதில் உதித்தது. விடாமுயற்சியுடன் செயல்பட துவங்கினேன். இன்று புனேவில் உள்ள கஃபேக்கள், காமெடி கிளப்கள் என அனைத்திலும் 300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்” என்று நெகிழ்ந்தவர் பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகளை ஒன்று திரட்டும் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
“என் இயலாமையை குறிப்பிட்டு அதை நகைச்சுவையாக வெளிப்படுத்தினேன். ஆனால், ஆரம்பத்தில் என் நகைச்சுவைகள் பலரை கவர்ந்துவிடவில்லை. காரணம், நான் மேடையில் ஏறியவுடன், ‘என் ஊன்றுகோலை பார்க்க உங்களுக்கு சங்கடமா இருந்தால், அதை இக்னோர் பண்ணிடுங்க, உங்க க்ரஷ் உங்களை இக்னோர் பண்ணுறது போல’ என்றுதான் ஆரம்பிப்பேன். அதை யாரும் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறவிக்குறைபாட்டை கொண்ட ஒரு நகைச்சுவை கலைஞனாக மக்கள் என்னை ஏற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்பதை உணர்ந்தேன். அதனால் நிகழ்ச்சிகளில் வழக்கமாக இல்லாமல், பார்வையாளர்களின் மனநிலைக்கு ஏற்ப நகைச்சுவைகளை தொகுத்து வழங்கினேன். அதில் எதனை மக்கள் ரசிக்கிறார்கள் என்று நான் புரிந்துகொள்ள நேரம் பிடித்தது.
மக்கள் என்னைப் பார்க்கும் போது என் உடல் நிலையை கண்டு சங்கடமாக உணர்ந்தார்கள். அதே சமயம் மாற்றுத்திறனாளி ஒருவரின் நகைச்சுவையை பார்த்து சிரிக்கவும் கஷ்டப்பட்டார்கள். அதனால் நகைச்சுவையின் நுணுக்கங்கள், அதனை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். அதன் மூலம் பார்வையாளர்களை ஆர்வத்துடன் வைக்க துவங்கினேன். பொதுவாக ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த எனக்கு அனுமதி வழங்குமுன் நான் எத்தனை நிமிடங்களுக்கு நிகழ்ச்சி நடத்துவேன்? அதற்கான கட்டணம் குறித்துதான் கேட்பார்கள்.
ஆனால் எனக்கு வேறு தேவைகள் அங்குள்ளதா என்ற சிந்தனை இருக்கும். முதலில் எனக்கு ஏற்ற இடமாக இருக்க வேண்டும். குறிப்பாக கழிப்பறை வசதி. மேடைக்கு செல்ல எத்தனை படிகள், அதனை கடக்க எவ்வளவு நேரம் ஆகும்… இது போன்ற வசதிகள் கொண்ட இடங்களை தேர்வு செய்ய இன்றும் சிரமமாகவே உள்ளன.
ஒருமுறை மேடையில் போடப்பட்டிருந்த மேட்டில் என் ஊன்றுகோல் சிக்கிக் கொண்டு நான் கொஞ்சம் தடுமாறினேன். பார்வையாளர்கள் அனைவரும் ஒரு நிமிடம் பதட்டமடைந்தனர். அதன் பிறகு எனக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நான் படிகளில் சிரமப்பட்டு மேடை ஏறுவதைப் பார்த்து பார்வையாளர்கள் அமைதியாக இருப்பார்கள். உடனே நான் “ஏன் கைத்தட்டுவதை நிறுத்திவிட்டீர்கள் ?” என கேலியாக கேட்பேன். காரணம், பார்வையாளர்கள் என் சிரமத்தை கண்டு சங்கடமடையும் போது அதை நான் உடனே சமாளிக்க வேண்டும். இல்லை என்றால் என்னால் முழு கவனத்துடன் செயல்பட முடியாது’’ என்றவர் தங்களைப் பற்றி மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
‘‘சாதாரணமாக உடலில் எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள்தான் ஸ்டாண்ட் – அப் காமெடி செய்ய மேடைகளில் ஏறுவார்கள். எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நகைச்சுவைத்திறன் இருந்தால், அதனை சமூக வலைத்தளங்களில் மீம்களாக பதிவிடலாம், ப்ளாக் போஸ்ட் செய்யலாம், ஆன்லைன் வீடியோக்களை வெளியிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், என்னை போல் நேரடியாக மேடையேறி நகைச்சுவை செய்வதை மக்கள் ஏற்பதில்லை.
இருப்பினும் என்னுடைய இந்தக் குறைபாட்டினை கொண்டு நான் ஸ்டாண்ட்- அப் காமெடியனாக இருப்பது எனக்கான தனித்துவம். மேலும், மேடையில் நாங்க சந்திக்கும் பிரச்னைகளை நகைச்சுவையாக வெளிச்சம்போட்டு காட்டும் போது பார்வையாளர்களை சிந்திக்க வைக்க முடிகிறது. என் தனிப்பட்ட அனுபவங்கள், நேர்கொள்ளும் சவாலான விஷயங்களை தைரியமாக பேசுகிறேன். மற்றவர்கள் பேசத் தயங்கும் விஷயங்களை எதிர்கொள்ள நான் பயப்படுவதில்லை. டிசெபிலிட்டி குறித்து பார்வையாளர்களின் தவறான கருத்துக்களை சரி செய்வதிலும் கவனம் செலுத்துகிறேன்” என்றவர் மாற்றுத்திறனாளியாக தான் எதிர்கொண்ட சிரமங்களை பகிர்கிறார்.
“நான் பள்ளியில் படிக்கும் போது என் ஆசிரியர் சக மாணவர்களை வெளியில் விளையாட அனுமதித்துவிட்டு என்னை மட்டும் வகுப்பறையிலேயே அமர்ந்திருக்க சொல்வார். அப்போது என்னை மட்டும் ஏன் இவ்வாறு நடத்துகிறார்கள் என்று வருத்தப்பட்டேன். நான் மீடியா அண்ட் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, மும்பையில் உள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்தது. என்னை மும்பைக்கு அனுப்ப என் பெற்றோர் சற்று தயங்கினார்கள்.
என் நிறுவன முதலாளி அவர்களை சமாதானப்படுத்தினார். மும்பைக்கு குடிபெயர்ந்தேன். ஆனால், மழைக்காலங்களில் பயணம் செய்வது சிரமமாக இருந்தது. அதனால் வேலையை விட்டுவிட்டு மீண்டும் புனேவுக்கு வந்துவிட்டேன். வேலைக்காக மும்பையில் குடியேறிய போது, லிஃப்ட் வசதி கொண்ட விடுதியை கண்டுபிடிக்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆனது. இது போன்ற தருணங்களில்தான் என்னை போன்றவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மக்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டேன்.
என் நண்பருடன் இணைந்து, ‘கிவ் சம் ஸ்பேஸ் (Give Some Space) எனும் திட்டத்தை தொடங்கி, புனேவில் உள்ள சில சாலைகள் மற்றும் கல்லூரி உள்ள பகுதிகளில் சாய்வுப் பாதைகளை அமைத்தோம். இதனால் சக்கர நாற்காலிகளை பயன்படுத்துபவர்கள், கடைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எளிதாக அணுக முடிந்தது. மாற்றுத்திறனாளிகள் குறித்த மக்களின் பொதுவான கண்ணோட்டத்தை மாற்ற நான் விரும்புகிறேன். டிசெபிலிட்டி இங்கு பிரச்னை இல்லை. ஆனால், அதன் அணுகுமுறைதான் பிரச்னையாக உள்ளது” என்றார் ஸ்வேதா.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்