* ரெகுலராக போதை பொருள் வாங்கியது அம்பலம்
* அதிமுக மாஜி நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை 6 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவி மற்றும் சில முன்னணி நடிகைகளுக்கு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் இடைத்தரகர் கெவின் மூலம் ரெகுலராக கொக்கைன் விற்பனை செய்தாக 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி இரவு குடிபோதையில் நடந்த மோதல் தொடர்பாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் (33), அவரது நண்பர் அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உள்பட 9 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்ற பிரடோ (38) என்பவரிடம் இருந்து அதிகளவில் கொக்கைன் என்ற போதைப் பொருள் வாங்கி சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, போலீசார் பிரசாத் மற்றும் போதை பொருள் விற்ற பிரதீப்குமார் அளித்த தகவலின்படி நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்வீர் என்ற கெவின் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், பிரதீப்குமார் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து உயர் ரக கொக்கைன் கடத்தி வந்து விற்பனை செய்த கானா நாட்டைச் சேர்ந்த ஜான் (38) மற்றும் ஜெஸ்வீர் என்ற கெவின் (35) ஆகிய 4 பேரை முதற்கட்டமாக 6 நாள் காவலில் நீதிமன்ற உத்தரவுப்படி நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் முதல் வரும் 8ம் தேதி வரை 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்ளிட்ட 4 பேரிடம் நடத்தி வரும் விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: வாரத்திற்கு இரண்டு நாள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல பாருக்கு பிரசாத் தனது நண்பர்களான அஜய் வாண்டையார், இசிஆர் ராஜா உடன் வருவார். அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் தனது தோழிகளை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலையில் பிரசாத் ‘தீங்கிரை’ திரைப்படத்திற்கு பார்ட்டி கொடுத்தார்.
அந்த பார்ட்டியில் தான் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாந்த் திரைப்படத்தின் ஹீரோ என்பதால், அந்த பார்ட்டியில் தனது தோழிகளான பிரபல இயக்குநர் ஒருவரின் முன்னாள் மனைவி, மச்சான்ஸ் நடிகை, மலையாளம் பெயர் கொண்ட நடிகை, முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட நடிகை ஆகியோரை பிரசாத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அனைவருக்கும் விருந்தாக ‘கொக்கைன்’ பிரசாத் வழங்கினார்.
அந்த பார்ட்டியில் ஆளும் தேசிய கட்சியின் மாநில நிர்வாகி ஒருவரும் கலந்து கொண்டு நடிகைகளுடன் கொக்கைன் பயன்படுத்தியுள்ளார். அதன் பிறகு நடிகைகளுக்கு பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மூலமே கொக்கைன் வழங்கியுள்ளார். கொக்கைன் பிஸ்னஸ் சினிமா பிரபலங்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருந்தால், இதை பிரசாத் தனது நண்பர்களான நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, தனது தொழில் நண்பரான அஜய் வாண்டையார், இசிஆர் ராஜா ஆகியோருடன் இணைந்து தொழிலாகவே செய்து வந்துள்ளார். இதற்காக மேற்கு ஆப்பிரிக்கா கானா நாட்டின் வாலிபர் ஜான் மூலம் உயர் ரக கொக்கைன் ரகசியமாக சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளார். சில சினிமா பிரபலங்கள் பிரதீப்குமார் மற்றும் கெவின் மூலம் நேரடியாக பணம் கொடுத்து கொக்கைன் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர சென்னையில் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வரும் முக்கிய பார்களுக்கு ஆர்டர் பெயரில் கொக்கைன் விற்பனையை பிரசாத் செய்துள்ளார். அந்த வகையில் பிரசாத் பல கோடிக்கு கானா நாட்டில் இருந்து கொக்கைன் ஜான் மூலம் கடத்தி வந்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த 22ம் தேதி நுங்கம்பாக்கத்தில் பாரில் போதையில் நடந்த தகராறால் இன்று போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டோம். எங்களால் நடிகர்களும் சிக்கிக் கொண்டனர் என பிரசாத் உள்ளிட்ட 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் கொக்கைன் ரெகுலராக பயன்படுத்தியதாக சில முன்னணி நடிகைகள் சிலரின் பெயரை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் பிரபலமானவர்கள் என்பதால், நேரடியாக விசாரணை நடத்த முடியாது. இதனால் பார்ட்டியில் நடிகைகளுக்கு கொக்கைன் வழங்கப்பட்ட பார் மற்றும் உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரையும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் 2 நடிகர்களும் அளிக்கும் வாக்குமூலத்தை தொடர்ந்தே இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.