ஆவடி: வீட்டில் இரவு உணவு சாப்பிட்டபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் அம்பத்தூர் காவல்நிலைய எஸ்ஐ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் நாகம்மைநகரைச் சேர்ந்தவர் சரவணன் (51). இவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சரவணன் வழக்கம்போல் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர், உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சரவணனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.உணவு சாப்பிட்டபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு எஸ்ஐ உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.