திண்டிவனம்: திண்டிவனம் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர், பெட்டிக்கடை வியாபாரி ஆகியோர் பலியானார்கள். மேலும் சாலையை கடந்தவரும் இதே கார் மோதி இறந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பேரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் பூபாலன் (45), இவர் அதே கிராமத்தில் பங்க் கடை நடத்தி வந்தார். இதே பகுதியில் இட்லி கடை (ஓட்டல்) நடத்தி வந்தவர் ஐயப்பன் (35). நண்பர்களான இருவரும் புரட்டாசி சனிக்கிழமை தினமான நேற்று திருப்பதி கோயிலுக்கு பேருந்தில் சென்று தரிசனம் செய்தனர். பின்னர் இருவரும் பேருந்தில் ஊர் திரும்பினர். நள்ளிரவு 12 மணி அளவில் கூட்டேரிப்பட்டில் இறங்கி அங்கு நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்துக்கொண்டு பேரணி நோக்கி புறப்பட்டனர்.
அவர்கள் மயிலம் அருகே விளங்கம்பாடியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே நடந்து சென்ற ஒருவர் மீது கார் மோதியதில் அங்குள்ள டிவைடர் (தடுப்புக்கட்டை) மீது மோதி பின்னர் எதிர்புறம் சென்று கொண்டிருந்த பைக் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சாலையின் குறுக்கே நடந்து ெசன்றவர் மற்றும் பைக்கில் சென்ற ஐயப்பன் மற்றும் பூபாலன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். சாலையை கடந்தபோது கார் ேமாதி இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மூன்று சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்ததும் கார் டிரைவர் சேதமடைந்த காரை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.