
திண்டுக்கல்: ராகுல்காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் கடந்த 6ம் தேதி காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் கட்சித் தலைவர் மணிகண்டன், தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசினார். இதையடுத்து அவர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து, தனது கட்சியினருடன் ஊர்வலமாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்து, மணிகண்டன் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் காமராஜர் சிலை அருகே மணிகண்டன் வைத்துள்ள பிளக்ஸ் போர்டில் ‘எனது பெயர் சாவர்க்கர் அல்ல, காந்தி. காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்’ என ராகுல் காந்தி கூறிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.