திண்டுக்கல்: திண்டுக்கல், அருப்புக்கோட்டையில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் அருகே இரண்டெல்லைபாறை இந்திரா காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (35). இவரது மனைவி அருணா (27). தம்பதிக்கு மகன் ரக்சன் ஜோ(7), மகள் ரக்சிதா (4) ஆகியோர் இருந்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ், குடும்பத்தினர் மற்றும் மாமியார் சரோஜாமேரியுடன் நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஒரே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மறுபக்க சாலைக்கு திரும்பி ஜார்ஜ் பெர்னாண்டசின் டூவீலர் மீது மோதியது. பின்னர் பாதிரியார் குழந்தைசாமி (48)யின் டூவீலர் மீதும் மோதியது. இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர். பாதிரியார் குழந்தைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். கார் டிரைவர் பிரவீன் குமார்(27) கைது செய்யப்பட்டார்.
மரத்தில் மோதி பலி: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(43). ஆசிரியர். கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பாலமுருகன் கலைக்குழுவை சேர்ந்த சவ்வாஸ்புரம் பகுதியை சேர்ந்த மணி(18), சின்னத்துரை(22), நெல்லை மாவட்டம், நடுவக்குறிச்சி முகமது அப்துல் ராசிக் ஆகிய 4 பேர், காரில் வெளியூர் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர். அருப்புக்கோட்டை அருகே சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் சென்றபோது, கார் திடீரென சாலையோர புளியமரத்தின் மீது மோதியது. இதில் 4 பேரும் பலியாகினர்.