திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நடைபெற்ற புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவில் குழந்தைகளை ஏலமிடும் வினோத திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ளது முத்தழகுப்பட்டி கிராமம். இங்குள்ள 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஆடி மாதத்தில் 4 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நாளான நேற்று குழந்தையை கோயிலில் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. குழந்தை வரம் கேட்டு செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் தம்பதியர் குழந்தை பிறந்தவுடன் ஆடி மாத திருவிழாவின் போது அந்த குழந்தையை கோயிலில் ஒப்படைத்து விடுவர். பின்னர் அந்த குழந்தையை கோவில் நிர்வாகத்தினர் ஏலம் விடுவர். இதில் பங்கேற்று அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்கும் நபர்கள் அந்த பணத்தை கோயிலில் காணிக்கையாக செலுத்துவர். பின்னர் ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து அந்த தொகையை கொடுத்து பெற்றோரே அந்த குழந்தையை வாங்கி செல்வர். பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடன் விழா பேராலயம் வளாகத்தில் விமர்சியாக நடைபெற்றது.