திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை திரும்ப வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்களுக்கும் , போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் வரதராஜன் நிலப்பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு சென்றபோது தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து வடமதுரை காவல்நிலையத்தில் வழக்கறிஞர் வரதராஜன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், வழக்குப்பதிவு செய்த சார்பு ஆய்வாளர் சித்திக்கை பணியிட நீக்கம் செய்யவேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர். வழக்கறிஞர்கள் உள்ளே நுழைய முடியாத வகையில் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலை மூடினர். இதனால் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.