திண்டுக்கல்: திண்டுக்கல் முத்தழகுபட்டி செபஸ்தியார் ஆலயத்திற்கு காணிக்கையாக கொடுத்த குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா விடிய விடிய கறி விருந்துடன் நடைபெற்றது. திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ளது முத்தழகுபட்டி இங்குள்ள 350 ஆண்டுகளுக்கு மேலான புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் 4 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் வினோத நிகழ்வான ஆலயத்திற்கு காணிக்கை கொடுத்த குழந்தைகளை ஏலம்விடும் வைபவம் நடைபெற்றது. அதாவது குழந்தைவரம் கேட்டு வேண்டி கொண்டவர்கள் கோரிக்கை நிறைவேறியதும் அந்த குழந்தையை கோவிலில் ஒப்படைப்பர்.பின்னர் அந்த குழந்தை தேவாலய நிர்வாகம் மூலம் ஏலம் விடப்பட்டு அதற்கான ஏலத்தொகையை ஆலயத்திற்கு செலுத்தி பெற்றோரே வாங்கி செல்வர். இதுமட்டுமின்றி வேண்டுதலுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் காணிக்கையாக அரிசி, பருப்பு, ஆடு, கோழி, தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு, வெங்காயம் போன்ற சமையல் பொருட்களை ஆலயத்திற்கு வழங்குவர்.
அவற்றை கொண்டு கறி விருந்து நடத்தப்படுகிறது. மலையில் துவங்கும் இந்த விருந்து விடிய விடிய நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உணவருந்தி மகிழ்கின்றனர். இந்த விழாவை ஒட்டி முத்தழகுபட்டியில் உள்ள பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், பள்ளிகல்லூரி மாணவ, மாணவிகள் என பலரும் ஒரு நாள் விடுமுறை எடுத்து பல்வேரு பணிகளில் தாங்களாகவே ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்றுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது .