திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே ஏடிஎம்-ல் பணம் நிரப்ப சென்றவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.29 லட்சம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவதானிபட்டியை சேர்ந்த முருகன் என்பவரிடம் நாகார்ஜூனன் மற்றும் மற்றொருவர் என இருவரும் இவரிடம் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 18 ஏடிஎம்களில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மற்றும் ஆத்தூர் தாலுகாவில் உள்ள பகுதிகளில் நாகார்ஜூனன் நேற்று முன்தினம் மாலை வத்தலகுண்டு, கே.சிங்காரக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஏடிஎம்களில் பணம் வைத்துவிட்டு சின்னாளம்பட்டியில் உள்ள பணம் ஏடிஎம்யில் வைப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ரூ.29 லட்சத்துடன் செம்பட்டி அடுத்த புது கோணங்கிபட்டி சாலையில் சென்றுள்ளார்.
அப்போது புதுகோணங்கிபட்டியை அடுத்து டாஸ்மாக் மதுக்கடை அருகில் இவரை வழிமறைத்து 3 நபர்கள் இவரது கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்துவிடுவோம் என மிரட்டி ரூ.29 லட்சத்தை பறித்து தப்பியோடினர். அதிர்ச்சி அடைந்த இவர் இது குறித்து ஏடிஎம் உரிமையாளர் முருகனிடம் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், முருகன் செம்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் விசாரணை நடத்தி செம்பட்டி இன்ஸ்பெக்ட்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் காட்சி பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கொள்ளையர்கள் தப்பி ஓடிய வாகனத்தின் பதிவெண்ணை வைத்து இரு சக்கர வாகனம் தேனி மாவட்டம் தேவதானிபட்டி பகுதியை சேர்ந்தது தெரியவந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பாஸ்கரன் மகன் சுரேந்திரன் (25),முகமது இப்ராஹிம் (20), காமாட்சி பிரதீப் (19) சிவன் (17) உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குழு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள செம்பட்டி போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர். ஏடிஎம்-ல் ரூ.29 லட்சம் எடுத்து சென்ற போது கொலை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.