Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆரம்பம்

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு செய்ய நவம்பர் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும்.

முதன்மைத் தேர்வு (மெயின்ஸ்), பிரதான தேர்வு (அட்வான்ஸ்டு) என 2 பிரிவாக இது நடத்தப்படுகிறது. இதில், முதன்மைத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்துகிறது. அதன்படி, 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 2ஆம் கட்டத் தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெறும். பிப்ரவரி 12ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால், மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம், என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.