போபால்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் கோல்வால்கர் பற்றிய சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்ததற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மீது மத்தியபிரதேச போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக கடந்த 1940 முதல் 1973 வரை இருந்தவர் கோல்வால்கர். இவரது புகைப்படத்துடன் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கொண்ட ஒரு புத்தக பக்கத்தின் படத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நேற்று முன்தினம் டிவிட்டரில் பகிர்ந்தார். அதில், ‘‘தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்களுக்கு நிலம், நீர் மீதான உரிமை பற்றி கோல்வால்கரின் எண்ணம் என்ன என்பதை அனைவரும் அறிய வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
அவர் பகிர்ந்த படத்தில், ‘தலித்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதை விட ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வாழ்வதையே விரும்புகிறேன்’ என்பது உள்ளிட்ட சில சர்ச்சை கருத்துக்களை கோல்வால்கர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்கறிஞரும் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவருமான ராஜேஷ் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் இந்தூர் துகோகஞ்ச் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 469, 500 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மாநில காங்கிரஸ் ஊடக தலைவர் கே.கே.மிஸ்ரா கூறுகையில், ‘‘இது போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவல்ல. ஆங்கில புத்தகம் ஒன்றின் அடிப்படையில் உண்மையைதான் திக் விஜய் சிங் பகிர்ந்துள்ளார். எனவே பாஜ கட்சி எங்கள் குரலை அடக்க முடியாது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது. பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் புகார்களில் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுக்கிறீர்கள்’’ என கூறி உள்ளார்.