‘‘வாங்குறது டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால, கண்காணிப்பும் டிஜிட்டலுக்கு மாறிடுச்சாமே என்னவாம்…’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர், கிரிவலம் மாவட்டத்துல சார் பதிவு ஆபிஸ்கள்ல விஜிலென்ஸ் ரெய்டு நடத்தி அடிக்கடி கரன்சிகளை பறிமுதல் செய்துட்டு வந்தாங்க.. வாரத்துக்கு ஒரு சார் பதிவு ஆபிஸ்ல பதுக்கி வெச்ச கரன்சி நோட்டுகள் எல்லாம் சிக்கிச்சு.. இந்த வாரம் கிரிவலம் மாவட்டத்துல தாலுகா ஆபிஸ் சர்வேயர் டிபார்ட்மெண்ட்ல ரெய்டு போயிருக்குது.. அதுல, கணக்குல வராத 56 கே கரன்சி சிக்கியிருக்குது. கரன்சிபோக இப்ப எல்லாம் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால, விஜிலென்ஸ்சும் மாறிட்டாங்களாம்.. அதன்படி அதிகாரியில இருந்து கடைநிலை ஊழியர் வரைக்கும் பட்டியலை தயார் செய்து, கண்காணிச்சிருக்காங்க.. அதுல 25எல் வரைக்கும் கரன்சி தன்னோட வங்கி கணக்கு மட்டுமின்றி பினாமியா உறவினர்களோட வங்கி கணக்குகளுக்கும் பரிமாறப்பட்டிருக்குதாம்.. இந்த டிஜிட்டல் பரிமாற்றம் விசாரணை தான் கிரிவலம் மாவட்டம் மட்டுமில்லாம பக்கத்துல இருக்குற மாவட்டங்கள் வரைக்கும் இருக்குற அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்குதாம்.. இந்த டிஜிட்டல் கண்காணிப்பு மேட்டர் தான் ஹாட் டாப்பிக்காக போய்கிட்டிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரேஷன் மண்எண்ணெய் கடத்தலில் சிக்கிய காவல் துறை அதிகாரி பற்றி சொல்லுங்க..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் அதிகாரி மண்ணெண்ணெய் உள்பட ரேஷன் பொருட்கள் கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்பட்டது அம்பலத்துக்கு வந்துள்ளதாம்.. தமிழக பகுதியில் இருந்து கேரள பகுதிக்கு மண்ணெண்ணெய் கடத்தப்படுகிறது. இந்த மண்ணெண்ணெய் பதுக்கல் பற்றி முதலில் காவல் அதிகாரிக்கு பொதுமக்கள் தரப்பில் தகவல் கொடுத்தால் அவர் அதை தனது கூட்டாளிகளிடம் தெரிவித்து அவர்கள் மண்ணெண்ணெய் பதுக்கல் இடங்களுக்கு சென்று அவற்றை எடுத்துச்சென்றுவிடுவார்களாம்.. கேட்டால் போலீசார் என்றும் கூறிவிடுவார்களாம்.. பறிமுதல் செய்தால் வழங்கல் துறையில் ஒப்படைக்க வேண்டிய பதுக்கல் மண்ணெண்ணெய், எங்கே போனதுன்னு விசாரித்த வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துட்டாங்களாம்.. விசாரணையில் சிக்கியுள்ள அதிகாரி காவல்நிலைய பணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கை வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றனராம் சக காக்கிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘லஞ்ச ஒழிப்பு துறைக்கு பயந்து சென்டிமென்டாக பூட்டப்பட்ட நுழைவாயிலை திறக்க மறுக்கிறாங்களாமே அதிகாரிங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் முதல்படை வீட்டில் உள்ள யூனியன் அலுவலகத்தில் சென்டிமென்ட் பார்த்துதான் முக்கியமான பணிகள் அனைத்தும் நடக்கிறதாம்.. இந்த யூனியன் அலுவலகத்தில் ஒருபுறம் உள்ளே சென்று, மறுபுறம் வெளியே செல்ல வசதியாக இரண்டு வாசல்கள் இருக்கிறது.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த யூனியன் அலுவலகத்தில் முக்கிய அதிகாரி ஒருவரின் அறைக்குள் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழைந்து ரெய்டு நடத்தி கைது செய்தாங்க.. அலுவலகத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்களையும் திறந்து வைத்ததுதான் இதற்கு காரணம்னு ஜோசியர் ஒருவர் சொன்னாராம்.. இதனால், ஒரு வாசல் கதவை சென்டிமென்டாக பூட்டினார்களாம்.. ஆனால், அதன் பின்னர் வந்த அதிகாரி ஒருவர் இரண்டாவது கதவை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துட்டாராம்.. ஆனால், அவரோ ஓய்வு பெறுவதற்கு முன்னர் சஸ்பெண்ட் ஆயிட்டாராம்.. இதனால், மீண்டும் ஜோசியரிடம் சென்றபோது, இனிமேல் இந்த கேட்டை யாரும் திறக்கக்கூடாது. திறந்தால் சிக்கல் தான் வரும் என கூறினாராம்.. இதனால், நமக்கு எதுக்கு வம்பு என நினைத்த தற்போதுள்ள அதிகாரிகள் சென்டிமென்ட் பார்த்து அந்த நுழைவு வாயிலை மட்டும் திறக்க மறுக்கின்றனராம்.. தங்களுக்கு எதுவும் சிக்கல் வந்து விடக் கூடாது என்ற பயத்தில் அதிகாரிகள் உள்ளனராம்.. வாசலை திறப்பதற்கு எல்லாமா ஜோசியம் பார்ப்பீங்கன்னு பொதுமக்கள் புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புல்லட்சாமியை சுற்றிவரும் கும்பல் பற்றி பல விஷயங்கள் காதில் விழுதே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுவையை ஆளும் புல்லட்சாமி, மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். சட்டசபைக்கு கந்தலான, அழுக்கோடு வரும் மக்களையும் புல்லட்சாமி, முகம் சுளிக்காமல் அவர்களது குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்து வருவது அவரது ஸ்டைல். ஆனால் சட்டசபையில் அவரை சுற்றியே மூன்று பேர் கும்பல் இருந்து வருகிறது. வீட்டில் இருந்து சட்டசபை வரை அக்கும்பல் கண்காணிக்கும். இதனால் பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எல்லாம் இக்கும்பலிடம் தான் புல்லட்சாமி எப்போது வருவார், என்னென்ன நிகழ்ச்சிகள் என்பது உள்பட பல்வேறு விவகாரங்களை கேட்டு தெரிந்து கொண்டு பார்க்க வருவார்கள். புல்லட்சாமி சந்திப்பு நிகழ்ச்சி எல்லாம் இவர்கள் தான் கச்சிதமாக செய்து முடிப்பார்கள். முக்கிய திட்டங்கள், அரசாணை விவகாரங்கள் எல்லாம் இக்கும்பலுக்கு அத்துப்பிடி. இதற்கு கைமாறாக பல லகரங்கள் வாங்குவது திரைமறைவில் நடந்து வருகிறது. இப்படியாக கடந்த மூன்று ஆண்டில் மூன்று பேரும், பல லகரங்களை வாங்கி குவித்து உள்ளனராம். மேலும் இவர்கள், இதனை வெளியில் வட்டிக்கு விட்டு சம்பாதித்து வருகிறார்களாம். இந்த விஷயங்கள் போலீஸ் உளவு துறைக்கும் தெரியுமாம். ஆனால் அவர்கள், புல்லட்சாமியிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார்களாம். சொன்னால் அவர் நடவடிக்கை எடுக்காமல் நேரிடையாக கும்பலிடம் கேட்டு விடுவார். தொடர்ந்தும் புல்லட்சாமியுடன் அவர்கள் இருப்பார்கள். அதனால் நமக்கும் தான் பிரச்னை ஏற்படும் என்பதால் அமைதியாக இருந்து விடுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.