ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் பேரூர் என்னும் இடத்தில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான `அருள்மிகு மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர்’ ஆலயம் உள்ளது. தொண்டை மண்டலத்தில் பாடல் பெற்ற 32 சிவஸ்தலங்களில், 12-வது திருத்தலமாக, திருஞானசம்பந்த பெருமானால் பாடல் பெற்ற திருத்தலம்.
இந்த ஊரில், பிரசித்தி பெற்ற குருபகவான் பரிகார ஸ்தலமான, ஜலநாதீஸ்வர் ஆலயத்தின் வடக்கே, ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள இந்த ஆலயத்தில் தானாக நீர்ஊற்றெடுத்து நந்தி வாயில் அந்நீர் பெருக்கெடுத்து, சிவபெருமானை வழிபட்டு, குளக்கரையில் விழுகின்ற அற்புத கட்டிட கலை அமைப்பு கொண்ட அதிசய கோயிலாகும்.
இந்த ஊரின் இயற்பெயரான `திருவூறல்’ என பெயரிட இக்கோயிலே காரணமாகும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பரிகார ஸ்தலத்தில் மட்டுமே உள்ள தெற்கு நுழைவாயில், தீர்த்த குளத்தை தாண்டி கருவறைக்கு செல்லுகின்ற அற்புத அமைப்பு இக்கோயிலில் உள்ளது. அதனால், இந்த கோயில் பித்ரு தோஷம் நீக்குகின்ற, பெருநோய் சாபங்கள் நிவர்த்தி செய்கின்ற சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலம் என ஆன்மிக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோயிலில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர், சதுர வடிவான ஆவுடையார் என்பதும், முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் எனவும் கூறுவர். அம்பாள், இறைவனின் வலது புறத்தில் சதுர்புஜ அன்னையாக காட்சியளித்து, சிவபெருமானின் அருள் வேண்டி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்துக் கொண்ட இடமாக இருப்பது மேலும் இங்கு விசேஷமாகும்.
பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக, அதாவது `அப்பு ஸ்தலமாக’ இந்த கோயில் இருப்பது மற்றுமொரு விசேஷமாகும். தற்போது இந்த ஆலயத்தில், திருப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிக விரைவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவினை சிவனடியார்களும், கிராம பொதுமக்களும் ஒன்று சேர்ந்து நடத்திட உள்ளார்கள். பக்தர்கள் அனைவரும் இதில் கலந்துக்கொண்டு, சிவனருள் பெறுங்கள்.
திருப்பணி செய்திட தொடர்புக்கு: 9944858037.
தொகுப்பு: சுரேஷ்குமார்