விலங்குகள், பறவைகள் போன்றவையெல்லாம் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை.மனிதனுடைய வாழ்க்கையோ மாற்றங்களால் கட்டமைக்கப்பட்டது. அந்த மாற்றங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டுவருகிறது. சிலருக்கு மாற்றங்கள் எதுவும் பிடிப்பதில்லை. குறிப்பாக அலுவலக வேலை, பிசினஸ் போன்றவற்றில் மாற்றம் என்றாலே ஏற்றுக்கொள்வதில்லை. கிணற்றுத் தவளை போல வட்டமடித்துக் கொண்டே இருப்பதில்தான் அவர்களுக்குத் திருப்தி அதிகம். அட்ட வணையை மாற்றி எதுவும் செய்ய மாட்டார்கள்.வெற்றியாளர்கள் மாற்றத்தை கண்டு பயந்து ஓடுவதில்லை. மாற்றம் என்பது மானிடத்தத்துவம் என புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சரியான மாற்றத்தை தேடிப் போய் அணைத்துக் கொள்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் பொருளாதார வீழ்ச்சியில் வழுக்கியது. பலர் வேலை இழந்து, பணம் இழந்து, சிக்கலில் விழுந்தார்கள். ஆனால் பெரும்பாலானோர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். ஆனால் மாற்றங்களைக் கண்டு மிரண்டு போனவர்களில் சிலர் தங்கள் வாழ்க்கையை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டு.என்ன நடக்கப்போகிறதோ, தெரியவில்லையே! எனும் பயம் முதலாவது, ஒரு வட்டத்துக்குள்ளே நீந்திக் கொண்டிருப்பவர்கள் சட்டென ஒரு மாற்றத்தைக் காணும் போது நிலைகுலைந்து போகிறார்கள். தொட்டியில் நீந்திக்கொண்டிருக்கும் ஒரு மீனைப் பிடித்து தரையில் விட்டால் துடிப்பதைப் போல இவர்கள் துடித்து விடுகிறார்கள். உண்மையில் விடப்பட்டது தரையில் அல்ல கடலில் எனும் வாழ்வின் உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து டிராப் ஓடேட்டா எனும் சின்ன நிறுவனத்தை ஆரம்பித்தார் ஒருவர். டிராபிக் சிக்னல் தொடர்பான தகவல்களைப் பெற்று அவற்றைப் பயனுள்ள அறிக்கைகளாக மாற்றுவது தான் அவருடைய திட்டம். ஓரளவு நிறுவனம் வெற்றிகரமாய் இயங்கிக் கொண்டிருந்தபோது அவர் அதை உதறிவிட்டு மாற்றத்தை நாடினார். அந்த மாற்றம் அவருக்கு உலகப் புகழை கொண்டு வந்து சேர்ந்தது. அவர்தான் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.இவரைப் போல வித்தியாசமாக சிந்தித்து மாற்றுச் சிந்தனையை மலரச்செய்பவர்கள் தான் இந்த உலகில் சாதிக்கின்றார்கள்.இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியையும் சொல்லலாம்.
தீ விபத்துகள் நேரிடும்போது மிகப்பெரிய தீயணைப்பு வாகனம் ஒன்று மணி ஓசை எழுப்பியபடி வருவதைப் பார்த்திருப்பீர்கள். அதில் தீயணைப்புக் கருவிகள், ஏணிகள், பல நூற்றுக்கணக்கான லிட்டர் நீர் மற்றும் பல வகையான கருவிகளும் இருக்கும் அல்லவா? தீயணைப்பு வீரர்களும் இந்த வாகனத்தில் பயணம் செய்வார்கள்.இந்த வாகனத்தை கிராஷ் ஃபயர் டெண்டர் என்பார்கள். இதன் பெரும்வடிவத்தால் இதை கனரக வாகனம் என்ற பட்டியலில் சேர்த்து இருக்கின்றார்கள். இதை இயக்குவது ஒரு பெண்ணுக்குச் சவாலான விஷயம், ஆனால் அதை இயக்கும் உரிமத்தையும் சான்றிதழையும் தனது 23 வயதிலேயே பெற்றிருக்கிறார் திஷா கோவிந்த் நாயக் என்ற பெண்மணி.இந்தத் தீயணைப்பு வாகனத்தை இயக்கி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுவது ஆண்களே, ஆனால் முதல் முறையாக திஷா என்ற பெண் இந்த சாகசப் பணிக்கான சான்றிதழ் பெற்று இந்திய வான் வரலாற்றில் இந்திய ஏரோட் ரோம் ரெஸ்க்யூ அண்ட் ஃபயர் பைட்டிங் (ARFF) என்ற அமைப்பின் மூலம் விமான நிலையங்களின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறார். விமானம் தீ விபத்தில் மாட்டிக்கொள்ளும்போது தீயை அணைக்கவும், மீட்கவும் பயன்படும் ‘கிராஷ் ஃபையர் டெண்டர்’ மிகவும் பயன்படும் இதில் ஈடுபட தகுதியான முதல் பெண் என்ற பெருமை திஷாவுக்கு உண்டு.வடக்கு கோவாவில் இருக்கும் பெர்னெம் என்ற ஊரைச் சேர்ந்தவர் திஷா. தீயணைப்பு வீரராக வேண்டும் என்ற இவரது கனவுக்கு இவரது பெற்றோரின் உறுதியான ஆதரவு இருந்தது.பள்ளிக்கூடப் பருவத்திலிருந்து அந்த துறையில் இவர் சேர பெற்றோர் ஊக்கமளித்து வந்திருக்கின்றனர்.
சீருடைப் பணியில் சேர வேண்டும் என்பதே ஆரம்பத்தில் திஷாவின் நோக்கமாக இருந்தது.ஆனால் அவரது உயரம் அதற்கு போதுமானதாக இல்லாததால் காவல்துறையில் அவரால் நுழைய முடியவில்லை.அதற்காக அவர் மனம் தளர்ந்து விடவில்லை.2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் இருக்கும் மனோஹர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் (MIA)அமைப்பில் மீட்பு மற்றும் தீயணைப்புத் துறையில் சேர விண்ணப்பித்தார்.இந்தப் பணியில் சேர்வதற்கு தேவையான முதல் கட்ட தேர்வுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றார்.சவால்கள் நிரம்பிய பயிற்சியைத் துணிகரமாக எதிர்கொண்டார்.அதில் சேர்ந்த பிறகு கிராஷ் ஃபயர் டெண்டரை இயக்கும் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அதற்காக நாமக்கல்லில் ஆறு மாதம் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள நேர்ந்தது. அதை இயக்குவதற்கு தேவையான திறமைகளையும், அறிவையும் அங்கே அவர் வளர்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு கனரக வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு பிறகு சிறப்பு நிபுணர் குழு ஒன்று அவரது அறிவு நுட்பம் மற்றும் செயலாற்றும் திறன்களை மதிப்பீடு செய்தது.அவரது மிகச்சிறந்த செயல்பாட்டுத்திறனால் அவருக்கு கிராஷ் ஃபயர் டெண்டரை இயக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது திஷாவுக்கு வயது 23 மட்டுமே.
இவர் இலட்சியத்தில் கொண்டிருந்த உறுதி மற்றும் விரிவான பயிற்சி ஆகியன இவரது வெற்றிக்கு காரணங்களாக அமைந்தது. பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே ஈடுபடக்கூடிய துறைகளில் பெண்களும் நுழைந்து தங்கள் பங்கைப் பெருமையோடு அளிக்கலாம் என்பதை திஷாவின் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.ஒரே மாதிரியான துறைகளைத் தேர்ந் தெடுக்காமல் மாற்றுச் சிந்தனையை மலரச் செய்து வித்தியாசமான துறையில் நுழைந்து சாதித்த சாதனை மங்கை தான் திஷா.இவரது சாதனை வித்தியாசமான துறையில் கால் பதித்து சாதிக்க விரும்பும் பலஇளம் பெண்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.