லாசேன்: சுவிட்சர்லாந்தின் லாசேனில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் 82.10 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்தார். 2வது வாய்ப்பில் 83.21 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 4வது இடத்தில் இருந்தார். 3வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 83.13 மீட்டர் தூரம் வீசினார். இவரை விடவும் ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.49 மீட்டர் தூரம் வீசி முதலிடத்திலும், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 87.08 மீட்டர் தூரம் வீசி 2வது இடத்திலும், உக்ரைனைச் சேர்ந்த ஆர்தர் 83.38 மீட்டர் தூரம் வீசி 3வது இடத்தில் இருந்தனர். தொடர்ந்து 4வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 82.34 மீட்டர் தூரம் மட்டும் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் நீரஜ் சோப்ராக்கு இன்னும் ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே மீதமிருந்தது. அதில் டாப் 3 இடங்களை பிடிக்கவில்லை என்றால், அவருக்கு 6 முறை வீசுவதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 5வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 85.58 மீட்டர் தூரம் வீசி டாப் 3 இடங்களுக்குள் சென்றார். தொடர்ந்து கடைசி வாய்ப்பில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஆச்சரியம் கொடுத்தார். இதனால் நீரஜ் சோப்ரா தனது கடைசி வாய்ப்பில் 90 மீட்டர் தூரத்தை எட்டி சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடைசி வாய்ப்பில் அவர் வீசிய ஈட்டி 89.49 மீட்டர் தூரம் சென்றது.
இதன் மூலமாக டைமண்ட் லீக் தொடரிலும் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தங்கப்பதக்கத்தை ஆண்டர்சன் பீட்டர்ஸ் கைப்பற்றினார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர்(87.8மீட்டர்) வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் தொடரிலேயே நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் தான் வீசியிருந்தார். தற்போது அதனை விடவும் அதிக தூரம் வீசி மீண்டும் வெள்ளியை கைப்பற்றியுள்ளார். 2018ம் ஆண்டு ஆஸ்ட்ராவா லீக் தொடருக்கு பின் நீரஜ் சோப்ரா பங்கேற்ற அத்தனை போட்டிகளிலும் டாப் 3ல் முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, டைமண்ட் லீக் இறுதிப் போட்டி பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் செப்டம்பர் 13, 14ம் தேதிகளில் நடைபெற உள்ளது.