டெல்லி: தோனி அரசியலில் களம் காண வேண்டும் என தான் விரும்புவதாக மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த 29ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி பெற்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத்தொடர்ந்து ரசிகர்களின் அன்பிற்காக தான் இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியிருந்தார். தோனியின் விருப்பத்திற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா தோனியின் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தோனி அரசியலிலும் களம் காண வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;
“அரசியலில் களமிறங்குவது குறித்து தோனி பரிசீலனை செய்ய வேண்டும். NCC தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன். ஆடுகளத்தில் எவ்வளவு தீவிரமாக செயலாற்றுகிறாரோ, அதே அளவுக்கு அவரிடம் அறிவார்ந்த சிந்தனையும் உள்ளது என உணர்ந்தேன். புதுமையான விஷயங்களை செய்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். நிச்சயம் தோனி வருங்காலத்தில் ஒரு தலைவராக திகழ்வார்” என ஆனந்த் மஹிந்த்ரா தெரிவித்துள்ளார்.