லண்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்த வீரர்கள், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஹால் ஆப் ஃபேம் சாதனையாளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்பே இந்த கவுரவம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டில், ஐசிசி ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் தோனியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர், 2007ம் ஆண்டு, உலக டி20 கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்து சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தவர்.
மேலும், 2011ல், ஐசிசி உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும் அவரே. தவிர, 2013ல், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கும் தோனியே தலைமை தாங்கி வழிநடத்தினார். அவரது தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி, ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில், 2009ம் ஆண்ட முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது. சென்னையில், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 224 ரன் குவித்து, இந்திய அணிக்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தந்தவர். தனது 40வது ஒரு நாள் போட்டியிலேயே, ஐசிசி ஆடவர் ஒரு நாள் பேட்டிங் ரேங்கிங்கில் முதலிடத்தை பிடித்த பெருமை தோனிக்கே உரியது.
200 ஒரு நாள் போட்டிகளில் ஆடி, அதிகபட்சமாக 123 முறை ஸ்டம்பிங் செய்த சாதனையை தோனி படைத்துள்ளார். இந்த கவுரவத்தை அடைந்துள்ள 11வது இந்தியராக தோனி திகழ்கிறார். இந்தாண்டு, ஐசிசி ஹால் ஆப் ஃபேம் கவுரவ பட்டியலில் 5 வீரர்கள், 2 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
‘தல’ தோனிக்கு முதல்வர் வாழ்த்து
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலில், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: ஐசிசி ஹால் ஆப் ஃபேம் கவுரவ பட்டியலில் இடம்பெற்றுள்ள எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்துக்கள். இந்திய அணிக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்துவதிலும், அதிகபட்ச ஸ்டம்பிங் செய்து சாதனை படைப்பதிலும், ஐசிசியின் அனைத்து வித போட்டிகளிலும் சாம்பியன் பட்டங்களை பெற்றுத் தருவதிலும், ஐபிஎல்லில் சென்னை அணிக்கு தலைமையேற்று 5 முறை சாம்பியன் பட்டம் பெறுவதிலும், அற்புத மரபை கட்டமைத்தவர் நீங்கள். தலைமைப் பண்புக்கு புதிய இலக்கணம் வகுத்தவர் நீங்கள். விக்கெட் கீப்பிங் பணியை, நீங்கள் ஒரு கலையாக மாற்றி காட்டியவர். கிரிக்கெட் துறையில் வருங்காலத்துக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர் நீங்கள். கிரிக்கெட் ரசிகர்களால் நீங்கள் என்றென்றும் ‘தல’ என அன்பாக அழைக்கப்படுவீர்.