Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தினகரன் நாளிதழ் - சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான மாபெரும் கல்வி கண்காட்சி தொடங்கியது: சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது

சென்னை: தினகரன் நாளிதழ்- சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான மாபெரும் கல்வி கண்காட்சி சென்னையில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. பிளஸ் 2 படித்து முடித்து தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய படிப்பை தேர்வு செய்வது என்பது மாணவர்களிடையே மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. பிளஸ் 2 முடித்து, அடுத்து என்ன படிக்கலாம். எந்த கல்லூரியில் சேரலாம் என்று காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க ஒவ்வொரு ஆண்டும் தினகரன் நாளிதழ் சார்பில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரமாண்ட கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டும், தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி இன்றும், நாளையும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. இன்று காலை 10 மணிக்கு  இந்த மாபெரும் கல்வி கண்காட்சி தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர் ரமேஷ் முன்னிலையில், சென்னை விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டீன் டாக்டர் ஆர்.ரகு, பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் துணை தலைவர் டாக்டர் ஆர்.எம்.சுரேஷ், சென்னை அமிர்தா குரூப் தலைவர் டாக்டர் பூமிநாதன், பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரெசென்ட் இன்ஸ்டியூட் ரிஜிஸ்டரர் டாக்டர் ராஜா உசேன், தனலட்சுமி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சேர்மன் வி.பி.ராமமூர்த்தி, ரெமோ குரூப் ஆப் இன்ஸ்ட்டியூஷன்ஸ் டைரக்டர் ரித்திக் பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மேலும் தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசுகளை வழங்கியும் வரவேற்றார். பின்னர் கண்காட்சியில் அரங்குகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிடுகின்றனர். இந்த கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட கல்லூரிகள், தங்களது அரங்குகளை அமைத்துள்ளன.

இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெறும் கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது. இதில் உள்நாட்டு படிப்புகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது. கல்வி கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கல்லூரிகளின் அரங்குகளை மாணவர்கள், பெற்றோருடன் பார்வையிட்டு விளக்கம் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரங்குகளில் பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், அனிமேஷன், அயல்நாட்டு கல்வி, கலை அறிவியல், நர்சிங், ஊடகம், ஹோட்டல் மேலாண்மை, கட்டிட கலை, புகைப்பட கல்வி, வர்த்தக கல்வி, கடல்சார் கல்வி, அழகு கலை, தீ மற் றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியம், ஆடை வடிவமைப்பு, விமானப் பணி, ட்ரோன் தொடர் பான படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்.

வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கான ஊக்கத்தொகைகள் குறித்த வழிமுறைகளும் வழங்கப்பட உள்ளது. இது தவிர கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள், கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், ஊக்கத்தொகை பெறுவது எப்படி, கட்டண சலுகைகள் பெறுவது எப்படி உள்ளிட்ட மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட உள்ளது. கண்காட்சிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு கல்வி கண்காட்சி தொடங்கியதும் மாணவர்கள், பெற்றோர்களுடன் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அரங்குகளில் கூட்டம் அலைமோதியது. மாணவர்களுக்கான அனைத்து வகையான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.