*வன உயிரின காப்பாளர் நேரில் ஆய்வு செய்து எச்சரிக்கை
தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி இஸ்லாம்பூர், அடவிசாமிபுரம், என்னேஸ்வரம் மற்றும் பாண்டேஸ்வரம் ஆகிய கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை இஸ்லாம்பூர் அருகில் உள்ள தனியார் ரிசார்ட் பகுதியில், கடந்த வாரம் ஒரு வளர்ப்பு நாய் மற்றும் ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக்கொன்றது. அப்பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று குட்டியுடன் சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், சிறுத்தை நடமாட்டம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இதையடுத்து, தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா வைத்தனர். அதில், சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது. இதன்மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது. அந்த சிறுத்தை குட்டியுடன் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் ஆகியோர் தலைமையில் இஸ்லாம்பூர், அடவிசாமிபுரம், என்னேஸ்வரம் மற்றும் பாண்டேஸ்வரம் ஆகிய கிராமங்களுக்கு வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இரவு நேரங்களில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வெளியே செல்ல வேண்டாம். வீட்டில் வளர்க்கும் நாய், ஆடு மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாப்பாக கட்டிப்போட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மேலும், கிராமப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரியவந்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதனிடையே சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென கிராம மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.