*பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, நடமாடும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம், தண்டரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட இஸ்லாம்பூர் கிராமம் அருகில், சன்னத்து ஓடைப்பகுதியில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி, அப்பகுதியில் மேய்ந்துக்கொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கி, ஒரு ஆட்டை இழுத்து சென்றதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையிலான, வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி இடத்தை தணிக்கை செய்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான தடயங்களை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டம் உளள் பகுதியினை ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தணிக்கை செய்து, தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும், சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் வனப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன் தலைமையில், அடிக்கடி தணிக்கை மேற்கொண்டும், வனப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியும் கண்காணித்து வரப்படுகிறது. மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனச்சரக அலுவலர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் வன கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இரவு, பகலாக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராவில் ஒரு சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதி, தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது. அப்பகுதியை சுற்றி சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைகலபுரம், தண்டரை, இஸ்லாம்பூர், பன்டேஸ்வரம், எண்ணேஸ்வரம், பென்னங்கூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி வனப்பணியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதி எல்லைக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்து, சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சிறுத்தையை பிடித்து வேறு பகுதியில் விடுவித்திட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, வனப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூண்டுகளை அமைத்து, சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்க, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட பகுதியில், ஓசூர் வனக்கோட்டை உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் தணிக்கை மேற்கொண்டு டிரோன், தொலைநோக்கிகள் மற்றும் கேமராக்கள் கொண்டு மேற்படி பகுதியினை ஆய்வு செய்து, வன கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து வேறு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்கும் வரை, பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம், வீட்டிற்கு வெளியில் மின் விளக்குகளை ஒளிரச்செய்யவும், எச்சரிக்கையுடன் இருக்கவும், சிறுத்தைகள் நடமாட்டம் ஏதேனும் தென்படும்பட்சத்தில், வன அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.