சென்னை: காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் சனீஸ்வரன் சன்னதி அமைந்திருப்பதால் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கோயிலின் அனைத்து விழாக்களும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் தான் நடத்தப்படும் நிலையில், அறங்காவலர் குழுவோ, சிறப்பு அதிகாரியோ இல்லாவிட்டால் விழாக்கள் தொடர்பாக ஆதீனத்தை கலந்தாலோசிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. அதன்படி, கோயிலின் செயல் அலுவலரையும், சிறப்பு அதிகாரியாக மாவட்ட ஆட்சியரையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 20ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து சனிப்பெயர்ச்சி திருவிழாவை நடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைத்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையே, கோயிலில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தருமபுரம் ஆதீன கருத்தர் தம்பிரானுடன் கலந்து பேசிய பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 25ம் தேதி புதுச்சேரி அரசிடம் தருமபுரம் ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உயர் நீதிமன்றத்தில் தருமபுரம் ஆதீனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், விழா பணிகள் தொடர்பாக தன்னை கலந்தாலோசிக்கவில்லை. விழா தொடர்பான டெண்டர் அறிவிப்பதிலும் கலந்தாலோசிக்கவில்லை. எனவே, தனது மனுவை பரிசீலிக்கவும், சனி பெயர்ச்சி விழா தொடர்பாக தன்னிடம் கலந்து பேசவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.