வாலாஜாபாத்: ஏகனாம்பேட்டை ஊராட்சியில் குண்டும், குழியுமான தார்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை ஊராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், ஆரம்பப்பள்ளி, நூலகம், இ-சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும், ஏகனாம்பேட்டையை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் உள்ளவர்கள் இங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஒரகடம், சுங்குவார்சத்திரம், பெரும்புதூர் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சார்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாணவிகள், இப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இதனால், இந்த சாலை எப்பொழுதுமே பரபரப்பாகவே காணப்படும்.
அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது என்பதால், ஆங்காங்கே குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கி காணப்படுகின்றன. மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், ‘ஏகனாம்பேட்டை சாலை முழுவதுமே குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இதனை சீரமைக்க, எங்கள் ஊராட்சிக்கு வரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர், மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.