சிவகங்கை மாவட்டம் அலவக்கோட்டை பகுதிக்கு அருகே உள்ள மேல அம்மச்சி பட்டியைச் சேர்ந்த சிவநேசன் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு மூன்று வருடம் வெளிநாட்டில் வேலை பார்த்தார். ஊர் திரும்பிய பிறகு தனது தாயாரின் துணையோடு விவசாயத்தில் கலக்கிவருகிறார். வெறும் 50 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி, சிவநேசன் குடும்பத்திற்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. இப்போது சுமார் நான்கரை ஏக்கரில் தர்பூசணி பயிரிட்டு அறுவடைக்காக காத்திருக்கிறது இவரது குடும்பம். ஒரு மேஜிக் போல் நடந்த கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
“கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்தேன். அப்போது எனது தாயார் எங்களது நிலத்தில் வெறும் 50 சென்ட் பரப்பில் தர்பூசணி பயிரிட்டார். அதற்காக ரூ.5 ஆயிரம் மட்டுமே செலவழித்து, ரூ.50 ஆயிரம் லாபம் பார்த்தார். அதுவரை நெல், கடலை என பயிரிட்டுவந்த எங்களுக்கு தர்பூசணி மூலம் கிடைத்த இந்த வருமானம் வெகுமானம் போல இருந்தது. நான் ஊருக்குத் திரும்பிய பிறகு திருமணம் நடந்தது. அதன்பின் நான் வெளிநாடு செல்லவில்லை. நமது நிலத்திலேயே விவசாயத்தைத் தொடங்கலாம் என முடிவெடுத்து கடந்த 2 வருடங்களாக தர்பூசணி பயிரிட்டு வருமானம் பார்த்து வருகிறேன்.
எங்கள் பகுதி முழுக்கவே வானம் பார்த்த செம்மண் பூமிதான். வெள்ளாமை மிகக் குறைந்த அளவிலேயே நடக்கும். அரசின் மானிய உதவியோடு போர்வெல் அமைத்து சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தோம். உடனே கூடுதலான நிலத்தில் தர்பூசணி சாகுபடியைத் தொடங்கினோம். கடந்த வருடம் நானும் அம்மாவும் ஒரு ஏக்கரில் தர்பூசணி பயிரிட்டு ரூ.86 ஆயிரம் லாபம் எடுத்தோம். செலவு வெறும் 16 ஆயிரம்தான். லாபப் பணத்தை வைத்து மேலும் ஒரு போர்வெல் அமைத்திருக்கிறோம். இந்த வருடம் 4.5 ஏக்கரில் தர்பூசணி பயிரிட்டு இருக்கிறோம். இதில் விரைவில் அறுவடையைத் தொடங்க இருக்கிறோம்’’ என தர்பூசணி சாகுபடிக்கு வந்த கதையைச் சுருக்கமாக பகிர்ந்துகொண்ட சிவநேசன், தர்பூசணி சாகுபடி முறைகள் குறித்து விளக்கினார்.
“தர்பூசணியைப் பொருத்தவரை விதைப்பதற்கு முன்பு ஐந்து கலப்பையில் இரண்டு முறை நன்றாக நிலத்தை உழுவோம். பின்பு ரொட்டவேட்டர் மூலம் சமன் செய்து, பார் அமைத்து, குழி எடுத்து தர்பூசணியைப் பயிரிடுவோம். தர்பூசணி சாகுபடிக்கு தற்போது பெரும்பாலும் வீரிய ரக விதைகள்தான் பயன்படுத்தப்படுகிறது. வீரியரகத்திலேயே இரண்டு மூன்று வெரைட்டி இருப்பதால் எங்கள் மண்ணிற்கு எது சரியாக இருக்கும் என தேடியபோது, மகாராஜாவைத் தேர்வு செய்தோம். மகாராஜா நல்ல விளைச்சலைத் தருகிறது என உணர்ந்து அதனையே பயிரிடுகிறோம். இந்த ரகம் 75 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். ஒரு பாக்கெட்டில் 460 விதைகள் இருக்கும். இதனை 10 சென்ட் நிலத்தில் விதைக்கலாம். அதாவது ஒரு ஏக்கருக்கு சராசரியாக 8 முதல் 10 பாக்கெட் விதைகள் தேவைப்படுகிறது.
ஒரு குழிக்கு 3 அல்லது 4 விதைகள் வீதம் விதைக்கப்பட்டு அடி உரமாக யூரியா கொடுக்கப்பட்டு உயிர்த் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. அதன்பின் ஒரு மாத காலத்திற்கு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என தண்ணீர் கொடுப்போம். கொடி நன்றாக படர்ந்தபிறகு நீரின் அளவை குறைத்துக் கொள்வோம். இப்படி விதைக்கிற விதைகள் நான்கு நாட்களில் செடியாக மண்ணை விட்டு வெளியே வரத் தொடங்கும். அதைத்தொடர்ந்து சரியாக 30 நாட்களில் பூ பூத்து அடுத்த ஒரு வாரத்தில் பிஞ்சு விட ஆரம்பித்துவிடும். விதைத்து 25வது நாளில் காய் வளர்ச்சிக்கான உரங்களைக் கொடுப்போம். பூச்சித் தாக்குதலுக்கு உரிய மருந்துகளையும் கொடுப்போம். வேர்ப்பூச்சிகளை தடுப்பதற்கு வேப்பம்புண்ணாக்கை உரிய நேரத்தில் கொடுப்போம். பனிக்காலத்தில் நுனிக்கருகல் நோய் தாக்கும். அதேபோல பிஞ்சு அழுகல் நோயும் வரும். அதனால் பூ பூக்கத் தொடங்கிய நாளில் இருந்து பயிரைக் கவனித்து வர வேண்டும்.
தர்பூசணியைப் பொருத்தவரை இரண்டு ரகமாக பிரிப்பார்கள். அதாவது 5 கிலோவிற்கு கீழ் உள்ள பழங்கள் இரண்டாவது ரகமாகவும், 5 கிலோவிற்கு மேல் உள்ள பழங்கள் முதல் ரகமாகவும் பிரிப்பார்கள். கடைசி அறுவடையில் இரண்டு ரகத்தை சேர்த்து ஒரு ஏக்கருக்கு 10 டன் தர்பூசணி மகசூலாக கிடைக்கும். முதல் ரகம், இரண்டாவது ரகம் என இரண்டையும் சேர்த்து சராசரியாக ரூ.8 என விற்பனை செய்தால் கூட நல்ல லாபம் பார்க்கலாம்’’ என மகிழ்கிறார் சிவநேசன்.
தொடர்புக்கு:
சிவநேசன்: 86107 54886
கடந்த வருடம் ஒரு ஏக்கருக்கு 10 டன் வரை அறுவடை செய்து 86 ஆயிரம் லாபம் பார்த்த சிவநேசன் இந்த முறை 4.5 ஏக்கருக்கு தர்பூசணி பயிரிட்டிருக்கிறார். வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.12வரை கேட்கிறார்கள். ரூ.10க்கு விற்பனை செய்தால்கூட சில லட்சம் லாபத்தை நிச்சயம் எடுக்கலாம் என உறுதியாக இருக்கிறார் சிவநேசன்.
தர்பூசணி விதைகள் விதைக்கும்போது ஒரு குழிக்கு மூன்று விதைகள் வீதம் விதைப்பதே சிறந்தது. ஒரு விதையில் பூச்சி தாக்கினாலும், இன்னொரு விதை காய் பிடிக்கவில்லை என்றாலும் இன்னொரு விதை கைகொடுக்கும் என்கிறார் சிவநேசன்.