‘‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக’’
என்பார் திருவள்ளுவர்.
அதாவது, நல்ல நூல்களை தேடிப் படிக்க வேண்டும். படித்த நூல்களை நினைவில் கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். கற்றுக்கொள்ளும் விஷயங்கள் நமது நினைவை விட்டு அகலாமல் இருக்க வேண்டும். அதாவது அவை நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும். இதற்கு தான் ஞாபக சக்தி என்று பெயர். இதையே வட மொழியில் ‘‘தாரணா சக்தி’’ என்று சொல்லுவார்கள்.
ஞாபகம் என்பது அவரவர் தகுதியை பொறுத்து அமைகிறது. சிலருக்கு சிலநாட்கள். சிலருக்கு சில மாதங்கள், சிலருக்கு சில வருடங்கள், என இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். காஞ்சி மகானை நேரில் கண்ட பலர் வியப்பது அந்த மகானுடைய ஞாபக சக்தியை தான். பல வருடங்களுக்கு முன்னால் பார்த்த நபரையும், நடந்த சம்பவத்தையும் அந்த நபரை கண்ட மாத்திரத்தில் நினைவு கூர்ந்து அதை சொல்லவும் செய்வார் காஞ்சி மகான். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பெரியவர் சொல்லும் சம்பவத்தை, அந்த சம்பவத்திற்கு உரிய நபர் கூட மறந்து இருப்பார். ஆனால் இவர் அதை மறக்காமல் நினைவில் கொண்டு இருப்பார். இப்படி மகான்களின் ஞாபக சக்தி என்பது நம்மை வியப்பில் ஆழ்த்தும்படி இருக்கும்.
மனிதர்களை போல மிருகங்களுக்கும் ஞாபக சக்தி உண்டு. மிருகங்களில் ஞாபக சக்தி அதிகம் கொண்ட மிருகமாக கருதப் படுவது யானை தான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. யானை தன்னை ஒரு காரணமும் இல்லாமல் துன்புறுத்திய பாகனை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளும். திடீரென்று மதம் பிடித்தால், தன்னை துன்புறுத்திய பாகனை நினைவில் கொண்டு அவனை தான் முதலில் தாக்கும். இதை நாம் இன்றைக்கும் கண்கூடாக பார்க்கலாம்.
சிலருக்கு ஞாபகம் என்பது இந்தப் பிறவியோடு நின்றுவிடுவது இல்லை. பல பிறவியின் ஞானத்தையும் அவர்கள் கொண்டு இருப்பார்கள். மனிதர்கள் போன பிறவியில் செய்த செயல்களின், நிலைபாடு இந்த பிறவியிலும் தொடரும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. போன பிறவியில், மந்திரம் பலிக்கும் தருவாயில் மந்திரத்தை ஜெபிக்க முடியாமல் இறந்து போன ஒரு மனிதன், அடுத்த பிறவியில் அந்த மந்திரத்தை, சில அளவு ஜெபித்தாலே சித்தி அடைந்து விடுவான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. இவ்வாறு சிலருக்கு முற்பிறப்பு ஞாபகமும், இந்த பிறப்பில் வரும். காளிதாசர் குமார சம்பவம் என்ற காவியத்தில் பின் வருமாறு சொல்கிறார்.
‘‘ப்ரபேதிரே பிராக்தந ஜன்ம வித்யா:’’அதாவது ஹிமயமலை அரசனின் பெண்ணாக பார்வதி தேவியானவள் உதித்த போதே, தாக்ஷாயணியாக போன ஜென்மத்தில் அவள் கற்ற ஞானம் அனைத்தும், அவளிடம் வந்து சேர்ந்தது சென்று சொல்கிறார்.கிருஷ்ண பரமாத்மா, அறுபத்தி நான்கு கலைகளையும் அறுபத்தி நான்கே நாட்களில் சாந்தீபணி முனிவரிடம் கற்று தேர்ந்தார் என்கிறது மத் பாகவதம். அது எப்படி ஒரு மனிதன் ஒரே நாளில் ஒரு கலையை கற்று அதில் தேர்ச்சியும் பெற முடியும் என்ற சந்தேகம் நமக்கு வரலாம். ஆனால் கண்ணனாக பிறந்த பரமாத்மா, உண்மையில் ஆதி நாராயணன், இல்லையா?. இந்த கலைகளை படைத்ததே அவன் தானே?. ஆகவே அவன் அறுபத்தி நான்கு கலைகளை கற்ற லீலையையும் இந்த தாரணா சக்திக்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
பரதர் என்னும் மகாராஜா பரம பக்தராக இருந்து, இறுதியில் ராஜ்ஜியம் முதலான அனைத்தையும் துறந்து காட்டில் தவம் செய்து வந்தார். அப்போது ஒரு மானை கண்டு அதன் மீது அதிக அன்பு வைத்தார். அதன் பயனாக அடுத்த பிறவியில் மானாக பிறந்தார். அதற்கு அடுத்த பிறவியை அவர் எடுத்த போது, முதலில் சொன்ன இரண்டு பிறவியும் அவருக்கு நினைவில் வந்தது. சாதாரண ஒரு மானின் மீது கொண்ட ஆசை, இரண்டு பிறவியை தனக்கு கொடுத்து விட்டதே என்று வருந்தி, பற்று அற்றவராக, வாழ்ந்து பரமன் அடியை அடைந்தார், என்று பாகவத மகா புராணம் சொல்கிறது. இந்த மகானையும் முற்பிறவியின் ஞாபகங்களை தெய்வ அருளால் கொண்டு இருந்தவர் என்று சொல்லலாம்.
அதே போல வேறு விதமான ஞாபக சக்தியும் கூட சொல்லப் படுகிறது. நாம் அனைவரும் தூங்குகிறோம். தூக்கத்தில் அனைவரும் கனவு காண்கிறோம். மறுநாள் காலை விழிக்கும் போது, நாம் கண்ட கனவு நமக்கு நினைவில் இருக்கிறதா என்று கேட்டால், பலருக்கு அவர்கள் கண்ட கனவு நினைவில் இருக்காது. ஆனால் கணித மேதை ராமானுஜர் கனவில், அவரது சொந்த ஊரில் இருந்த நாமகிரி தாயாராக விளங்கும் மகாலக்ஷ்மி தேவி, வந்து கணித சூத்திரங்களை சொல்லுவாளாம். அதை அப்படியே நினைவில் கொண்டு மறுநாள் பயன்படுத்துவார் கணித மேதை ராமானுஜர். இதுவும் ஒரு விதமான ஞாபக சக்தி தான்.
சூத பௌரானிகர் என்ற மகான் தான், பதினெட்டு புராணங்களையும், நைமிசாரண்யத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். சூத பௌரானிகர், இந்த புராணங்களை எல்லாம் வேத வியாசர் மூலமாக கற்றுக் கொண்டு, நைமிசாரண்ய முனிவர்களுக்கு சொன்னார். இதையும் ஒரு தெய்வீக ஞானம் என்று தான் சொல்லமுடியும். ஏன் எனில், ஒவ்வொரு புராணத்திலும் ஆயிரம் ஆயிரம் ஸ்லோகங்கள் இருக்கிறது.
இத்தனையையும் ஞாகபம் வைத்துக் கொண்டு, சூத பௌரானிகர் நமக்கு சொன்னார் இல்லையா?
வேதங்களுக்கு ‘‘எழுதா கிழவி’’ என்று பெயர். காரணம், முதலில் யாரும் வேதங்களை எழுதி வைக்கவில்லை. காற்றில் இருக்கும் மந்திர ஒலியை தெய்வத்தின் அருளால் ஒரு முனிவர் உணர்ந்து சொல்லுவார். அதை அவரது சீடர்கள் அப்படியே திரும்பி சொல்லி சொல்லி மனப்பாடம் செய்வார்கள். அந்த சீடர்கள் தங்களது சீடர்களுக்கு சொல்லுவார்கள். அவர்கள் மனப்பாடம் செய்வார்கள். இப்படி வாய் வழியாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வேதம் கொண்டு செல்லப்பட்டது. ஆகவே அந்த நாட்களில் வாழ்ந்த முனிவர்கள் வேத மந்திரத்தை மிக அழகாக நினைவில் நிறுத்தியதை கூட, தாரணா சக்திக்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.
அதே போல தேவையற்ற கசப்பான அனுபவங்களையும், தோல்விகளையும் ஒரு மனிதன் மறக்க வேண்டியும் இருக்கிறது. அதை அவன் மறக்கவில்லை என்றால், அதை எண்ணி எண்ணியே அவன் சோகத்திலும் துயரத்திலும் ஆழ்ந்து போகக் கூடும். இதையே, இந்த காலத்தில் depression என்று சொல்கிறார்கள். நல்லவை அனைத்தும் நினைவில் இருக்க வேண்டும், அதே சமயம் கெட்டவை அனைத்தும் மறக்கவும் வேண்டும். நமது முன்னோர்கள் அழகாக ஒரு பழமொழி சொல்வார்கள். ‘‘களவும் கற்று மற’’ என்று. களவும் ஒரு கல்வி தான் ஆகவே அதை கற்றுக்கொள். ஆனால் அதை மறந்து விடு, என்று சொல்கிறார்கள். அதாவது தவறான விஷயங்களை கற்றால் அதை மறந்து விடு என்று பொருள். மொத்தத்தில் ஞாபக சக்தி என்பது, நல்லவற்றை ஞாபகம் வைத்துக் கொள்வது மற்றும் தீயவற்றை மறந்துவிடுவது தான்.
இதை எல்லாம் கொண்டு பார்க்கும் போது, ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள மனித முயற்சியை தாண்டி, தெய்வ அருள் என்று ஒன்று தேவைப்படுவது புரிகிறது இல்லையா? இந்த ஞாபக சக்தியை தரும் தேவி தான் ‘‘தாரணா சரஸ்வதி’’ என்று அழைக்கப்படுகிறாள்.
ஸுராஸுர ஸேவித பாத பங்கஜா
கரே விராஜத் கமநீய புஸ்தகா
விரிஞ்சி பத்னீ கமலாஸந ஸ்திதா
சரஸ்வதி நருத்யது வாசி மே சதா.
இந்த தாரணா சரஸ்வதி தேவர்களாலும் அசுரர்களாலும் சேவிக்கப்படும் தாமரை பாதங்கள் கொண்டவளாக, திருக்கரங்களில் புஸ்தகத்தை கொண்டவளாகவும், நான்முகன் மனை மங்கலமாகவும், இருக்கிறாள் என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கிறது. இந்த தேவியை உபாசிக்க விரும்புபவர்கள், தைத்திரீய உபநிஷத்தில் உள்ள தாரணா சரஸ்வதி மந்திரத்தை, ஒரு நல்ல குருவின் மூலம் உபதேசம் பெற்றுக்கொண்டு ஜெபம் செய்யலாம். தாரணா சரஸ்வதி மந்திரம் என்பது ‘‘நமோ பிரம்ஹனே தாரணம் மே அஸ்து’’ என்று தொடங்கும் வேத மந்திரமாகும். இதை, வைதீக தாரணா சரஸ்வதி மந்திரம் என்று சொல்வார்கள்.
தாந்த்ரீக ரீதியான ஒரு தாரணா சரஸ்வதி மந்திரமும் இருக்கிறது. இதையும் ஒரு தக்க குருவின் மூலம் உபதேசம் பெற்று தான் ஜெபம் செய்ய வேண்டும். அல்லது மேலே நாம் கண்ட தாரணா சரஸ்வதி ஸ்லோகத்தை அம்பிகையின் மந்திரமாக கருதி ஜபம் செய்து வரலாம். இதுவும் உயர்ந்த பலன்களை தரவல்லது.
தோயதே ஜாநூ த்வயஸே ஸ்திதஸ் ஸ்ந்
விசிந்த்ய தேவீம் ரவி பிம்ப ஸம்ஸ்தாம்
வித்யாம் ப்ரஜாப்யந் நியமேந பக்த்யா
ஸஹஸ்ர ஸங்க்யம் திநஸோ நரே ய:
இந்த தாரணா சரஸ்வதி மந்திரத்தை, இரண்டு முழங்காலும் நனையும் அளவுக்கு தண்ணீரில் நின்று கொண்டு, சூரியன் உதிக்கும் வேளையில், சூரியனுக்கு மத்தியில் இருப்பவளாக தேவி தாரணா சரஸ்வதியை த்யானம் செய்துகொண்டு பிரம்மச்சரிய நியமத்துடன், பக்தியோடு நூற்றி எட்டு அல்லது ஆயிரத்து எட்டு முறை ஜெபம் செய்ய வேண்டும்.
இதை தொடர்ந்து ஒரு மண்டலம் செய்யவேண்டும். இவ்வாறு செய்தால் அந்த மனிதனின் வாய் அருவியை போல கவிதை மழை பொழியும் என்றும், அபாரமான ஞாபக சக்தி ஏற்படும் என்றும், ஆதி சங்கரர் சொல்கிறார். நாமும் ஆதிசங்கரர் சொன்ன படி, தாரணா சரஸ்வதி தேவியை பூஜித்து, தேவியின் அருள் பெற்று, நற்கதி பெறுவோம்.
ஜி.மகேஷ்