ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி-அச்சல் முனை இடையே தென்கடல் பகுதியில் வெள்ளை நிற மூட்டைகள் இன்று காலை கரை ஒதுங்கின. மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் மரைன் போலீசார் விரைந்து வந்து மூட்டைகளை கைப்பற்றி சோதனையிட்டனர். அதில், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன வேதிப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
கரை ஒதுங்கிய சில பார்சல்களை மரைன் போலீசார் கைப்பற்றினர். மேலும், அதே பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலமும் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர். பார்சல் மற்றும் ஆண் சடலம் ஒருங்கே கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கடலோர காவல் படையினர் கடலில் ஆங்காங்கே ஒதுங்கியுள்ள பார்சல்களை கைப்பற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மரைன் மற்றும் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 24ம் தேதி கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி சென்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. இதனால் கப்பலில் இருந்து வேதி பொருட்கள் அடங்கிய கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. இந்த கண்டெய்னர்களில் இருந்த மூட்டைகள்தான் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் அல்லது இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டவையா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.