சென்னை: தெலுங்கு, தமிழ், இந்தியில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ என்ற படம், வரும் ஜூன் மாதம் வெளியாகிறது. இதையடுத்து தமிழில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ என்ற படம் வெளியாகிறது. இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்து வரும் தனுஷ், மறைந்த குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு படத்தில், அப்துல் கலாம் வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்துகு ‘கலாம்: மிஸைல் மேன் ஆஃப் இந்தியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஆதிபுருஷ்’ ஓம் ராவத் இயக்குகிறார். அப்துல் கலாம் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ என்ற நூலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது.
குழந்தை பருவம் முதல் அப்துல் கலாமின் பயணத்தை சொல்லும் படமான இதுகுறித்து ஓம் ராவத் கூறுகையில், ‘ராமேஸ்வரம் முதல் ராஷ்டிரபதி பவன் வரை ஒரு லெஜண்டின் பயணம் தொடங்குகிறது. இந்தியாவின் ஏவுகணை நாயகன் வெள்ளித்திரைக்கு வருகிறார். பெரிதாக கனவு காணுங்கள், உயர்ந்த இடத்துக்கு செல்லுங்கள்’ என்றார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற சர்ச்சைக்குரிய இந்தி படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வாலின் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், அப்துல் கலாம் பயோபிக்கை தயாரிக்கிறது. ராமேஸ்வரத்தில் சாதாரண பின்னணியில் பிறந்து, கல்வியின் மூலம் நாட்டின் உயர்ந்த நிலைக்கு சென்றவர், அப்துல் கலாம். இந்தியாவின் முதல் அணு ஆயுத தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய அவர், நாட்டின் குடியரசு தலைவராகவும் பதவி வகித்தார்.
அப்துல் கலாம் வேடத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறுகையில், ‘அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா வேடத்தில் நான் நடிப்பதை மிகப்பெரிய பாக்கியமாகவும், பணிவாகவும் உணர்கிறேன்’ என்றார். முன்னதாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசை அமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக்கில், இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.