சிவகங்கை : சிவகங்கை திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும், காவல்துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டிஜிபி உத்தவிட்டுள்ளார். நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், தனிப்படை போலீசாரால் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து இளைஞர் அஜித் குமார் மரண வழக்கின் விசாரணையின் போது, வழக்குப்பதிவு செய்யாமல் யாருடைய உத்தரவின்பேரில் அஜித்குமார் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும், காவல்துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தவிட்டுள்ளார். மாவட்டங்களில் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி, டி.பி கட்டுப்பாட்டில் தனிப்படைகள் இருப்பது வழக்கம் என்ற நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட எஸ்.எஸ்.பிக்கள், காவல் ஆய்வாளர்கள் கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்படாத சிறப்புப் படைகளை கலைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், “குற்றசம்பவங்கள் நடைபெறும் பொழுது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும். எந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்தாலும் 35b நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளை தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் செயல்படக்கூடாது.ஏற்கெனவே அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் இருந்தால் அவற்றை உடனடியாக கலைக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியே முக்கியமான வழக்குகளுக்கு மட்டுமே சிறப்புப் பிரிவு அமைக்க வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.