திருவண்ணாமலை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பவுர்ணமி நாட்களைப் போல, வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரிக்கிறது. அதன்படி, வார இறுதி விடுமுறை தினமான சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அமைந்திருக்கிறது. எனவே, அண்ணாமலையார் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும், நாளையும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பின்னர், அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கம் போல அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. ராஜகோபுரத்தையும் கடந்து வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 3 மணி நேரம் வரை தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர் விடுமுறையால் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் நெரிசல் நகரின் பல பகுதிகளில் காணப்பட்டது. மாட வீதி, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கார், வேன்கள் அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான குறுக்கு சாலைகளில், வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், நேற்று இரவு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதையில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.