மதுரை: பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், திருச்செந்தூர் கோயில் தூய்மையாக உள்ளதாக அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டுத் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணியசாமி திருக்கோயிலில் முந்தைய நடைமுறைப்படியே தேங்காய் உடைக்குமாறும், விபூதி பிரசாதத்தை பக்தர்கள் சாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் வாயிலில் வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று சுதந்திர பரிபாலன ஸ்தலத்தார்கள் சபா தலைவர் வீரபாகுமூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘‘ஆண்டுதோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், திருச்செந்தூர் கோயிலை தூய்மையாக வைத்து உள்ளனர். அதற்கு அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தை பாராட்ட வேண்டும். மேலும் பக்தர்களுக்கு விபூதி கொடுப்பதில் கோயில் நடைமுறைகள், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். விபூதி கொடுக்கும் இடம் சன்னதியில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இருந்தால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும். இதுகுறித்து மனுதாரர் தரப்பில் எந்த இடம் என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறிய நீதிபதி, பிறகு விரிவான வாதத்திற்காக வரும் நவ. 24ம் தேதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.