பொன்னேரி: பொன்னேரி அருகே ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பொன்னேரி அருகே ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பால் குடம் எடுத்து பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். திருவேங்கடபுரம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் ஆடி மாதம் திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.
இந்நிலையில், நேற்று ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 14ம் ஆண்டு பால் குட திருவிழா நடந்தது. ஆதி பொன்னியம்மன் மண்டபத்தில் இருந்து ஆலய திருப்பணி குழுவினர், ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பால் குடங்களை சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பால்குட திருவிழாவை முன்னிட்டு கோயிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது.