வத்திராயிருப்பு: ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமிக்கு 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி, ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 31ம் தேதி முதல் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று அமாவாசை என்பதால் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். பகல் 12 மணிவரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.கடைசி நாள் என்பதால் இன்றும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சதுரகிரி பகுதியில் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதால் திடீரென மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.