பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா காப்புகட்டுதலுடன் கடந்த மே 13ம் தேதி துவங்கியது.
இதைதொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக முள்படுகளம் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மாரியம்மன் கோயில் முன் முத்து பல்லக்கு படுகளம் ரதத்தில் அம்மன் எழுந்தருளினார்.
பின்னர் சுவாமியை ஊர்வலமாக ஏரிக்கரையில் உள்ள மேனட்டாய் கோயிலுக்கு பக்தர்கள் சுமந்து வந்தனர். இதையடுத்து குடியழைப்பு நிகழ்ச்சியுடன் 1008 தீப்பந்தங்கள் ஏந்தியவாறு சாவடி அருகே மண்டி பந்தலுக்கு அம்மனை பக்தர்கள் தூக்கி வந்தனர். பின்னர் 1008 தீப்பந்தங்களை பக்தர்கள் ஏந்தி நின்ற நிலையில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் முள்படுக்கையில் படுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
முன்படுகள நிகழ்ச்சி நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஈச்சங்காடு, மருதடி, செட்டிகுளம், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், இரூர், திருவளக்குறிச்சி, பாடாலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்தும் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.