திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்காக உணவு கவுன்டர் எண்ணிக்கை 3 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக அன்னப்பிரசாத கூடம் கட்டப்பட்டு அதில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அறங்காவலர் குழு தலைவர் சுப்பா மற்றும் தலைமை செயல் அதிகாரி தர்மா உத்தரவின்பேரில் திருமலையில் பக்தர்களின் வசதிக்காக நேற்று அன்னபிரசாத துறையின் கீழ் யாத்திரிகள் சமுதாயக்கூடத்தில் உணவு கவுன்டர் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, முதலில் அமைக்கப்பட்டுள்ள அன்னதான கூடத்தில் ஏழுமலையான் படத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இங்கு காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் அன்னபிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த உணவு கவுன்டர் யாத்திரிகள் சமுதாயக்கூடம் ஒன்றில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு வசதியாக உள்ளது. திருமலையில் மாத்ரு தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கூடத்துடன், பழைய அன்னதான வளாகம், பிஏசி-2ல், அன்னபிரசாத விநியோகம் செய்யப்படுகிறது. இவை தவிர ராம்பகிஜா பஸ் நிலையம் மற்றும் சிஆர்ஒ அலுவலகம் ஆகியவற்றில் உணவு கவுன்டர்கள் உள்ளன. இதன் மூலம் மொத்த உணவு கவுன்டர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.இந்த நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் தேவி, கேட்டரிங் அதிகாரி சாஸ்திரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.