ராசிபுரம், நவ.8: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் விழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் நேற்று கோயில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரியிடம் சாட்டையடி வாங்கினால் பேய், பில்லி சூனியம் அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை ஐதீகமாக உள்ளது. இதனால், நேற்று காலை முதலே பக்தர்கள் வரிசையாக நின்று பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோல் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூரில் உள்ள மாரியம்மன் கோயில், ஐப்பசி திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. விழாவில் நேற்று காலை அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி சட்டை எடுத்து கோயிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடந்தது. வேண்டுதலை நிறைவேற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். சிலர் தங்களின் கைக் குழந்தைகளுடன் நின்று சாட்டையடி வாங்கினர். இந்த விநோத நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.