ஜெகனாபாத்: பக்தர்களுக்கும், பூ விற்பனையாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பீகாரில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் பலியாகி விட்டனர். பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் பராபர் பஹாடி பகுதியில் பாபா சித்தேஷ்வர் நாத் கோயில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு கன்வாரியார்கள் அதிக அளவில் வந்திருந்தனர். அவர்களுக்கும் கோயிலுக்கு வெளியே பூ விற்பனை செய்பவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் கோயில் வளாகத்தில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்கள் பியாரே பாஸ்வான் (30), நிஷா தேவி (30), புனம் தேவி (30), நிஷா குமாரி (21), சுசீலா தேவி (64) என அடையாளம் காணப்பட்டனர். ஒரு பெண்ணின் அடையாளம் தெரியவில்லை. இறந்தவர்களில் பெரும்பானோர் கன்வாரியாக்கள் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியை ஜெகனாபாத் மாவட்ட கலெக்டர் அலங்கிரிதா பாண்டே நேரில் ஆய்வு செய்தார். மேலும் கோயிலில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹4 லட்சம் நிவாரணம் வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ₹50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவிட்டார். காயமடைந்தவர்கள் முகுந்தபூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.