நாகர்கோவில்: குமரிமாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட திரிவேணி சங்கமம், சுனாமி பூங்கா, முக்கோண பூங்கா, சூரிய உதயம் மற்றும் அஸ்தமன பகுதி உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் பேரூராட்சியால் சீரமைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்படி கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அமைந்துள்ளது. இந்த கோயிலின் முன்புறம் அரசர்கள் தங்கும் கொட்டாரம் அமைந்துள்ளது.
பின்பகுதியில் 679/2 என்ற சர்வே எண் கொண்ட சுமார் 018.6 ஹெக்டேர் (46 சென்ட்) பரப்புள்ள காலியிடம் அமைந்துள்ளது. மேற்படி காலியிடம் அரசுப்புறம்போக்கு என வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு அமைந்துள்ள கடைக்கட்டிடங்களின் வருவாய் அனைத்தும் அறநிலையத்துறைக்கு செல்கிறது. தரை வாடகை கடை மூலம் கிடைக்கும் வருவாயும், கழிப்பறை மூலம் கிடைக்கும் வருவாயும் அறநிலையத்துறைக்குச் செல்கிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் அறநிலையத்துறை மூலம் மேற்கொள்ளப்பட வில்லை.
சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிகளின் நலனுக்காக திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிகள் சாலைகள், பூங்காக்கள், சூரியன் அஸ்தமான பகுதி உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை சுழற்சி துறையில் தூய்மை பணிகள், தெருமின் விளக்கு வசதிகள், ஆர்ஒ மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், ஆண், பெண் இருபாலருக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள், கடலில் குளிக்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச உடை மாற்றும் அறை வசதி, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய கல் படிக்கட்டுகளில் தினசரி காலை, மாலை வேளைகளில் பாசிகளை கழுவி சுத்தம் செய்யும் பணிகள் அனைத்தும் கன்னியாகுமரி பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் திருக்கோவிலுக்கு பின்புறமுள்ள இடத்தில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசி பராமரிப்பு பணிகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி சுமார் 15 தூய்மை பணியாளர்கள் காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் இப்பகுதியிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான ஊதியங்களும் கன்னியாகுமரி பேரூராட்சி மூலம் வழங்கப்படுகிறது. இவ்வாறாக செலவினங்கள் அனைத்தும் பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் போது அப்பகுதியில் இருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் அறநிலையத்துறைக்கே சென்று விடுகிறது.
மேலும் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவிற்கான ஆம்பிதியேட்டர் மற்றும் திரிவேணி சங்கம பகுதியில் பாதிப்படைந்த சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகள் புதுப்பித்தல், சுனாமி பூங்கா புதுப்பித்தல், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், மாற்றுத்திறனாளிகள் சாய்வுதளம், திரிவேணி சங்கமம் போகும் வழியிலுள்ள அலங்கார நீருற்று பராமரிப்பு செய்தல், காந்தி மண்டபம் எதிரே உள்ள முக்கோண பூங்கா பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. சுற்றுலா தளத்தினை உலக தரத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.